நடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விழுப்புரம் இளைஞர் பிடிபட்டார்.
சென்னையில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. எதிர் முனையில் செல்போனில் பேசியவர், சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள நடிகர் விஜய்யின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடித்துவிடும் என்றும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார். கட்டுப்பாட்டு அறை போலீஸார் இத்தகவலை உடனடியாக உயரதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.
இதையடுத்து, விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமம் பாஸ்கர் காலனியில் உள்ள விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு நிபுணர்களுடன் விருகம்பாக்கம் போலீஸார் சென்றனர். வெடிகுண்டுகளை கண்டறியும் கருவி, மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தப்பட்டது. நீண்ட நேரம் சோதனை நடத்தியும் வெடிகுண்டு எதுவும் சிக்காததால், தொலைபேசி மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.
இதற்கிடையில், சைபர் கிரைம் போலீஸார் உதவியுடன் விசாரணை நடத்தியதில், குண்டு மிரட்டல் விடுத்தவர் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியை சேர்ந்த புவனேஸ்வர்(22) என்பது தெரியவந்தது.
சென்னை போலீஸார் கொடுத்த தகவலின்பேரில், விழுப்புரம் மாவட்ட போலீஸார் அவரை பிடித்து விசாரித்தனர். அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்போல இருந்ததால், இனி இதுபோல நடந்துகொள்ளாமல் கவனமாக பார்த்துக் கொள்ளுமாறு அவரது குடும்பத்தினரிடம் போலீஸார் அறிவுறுத்தினர். முதல்வர் அலு வலகத்துக்கு மிரட்டல் விடுத்ததாக அவர் ஏற்கெனவே எச்சரிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் விஜய், தற்போது சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசிப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.