சிறுபான்மையின மக்களின் தலை விதியை தீர்மானிக்கப்போகும் தேர்தலே இது. எனவே, அரசியல் இருப்பையும், பிரதிநிதித்துவத்தையும் பாதுகாத்துக்கொள்ளும் வகையில் தமிழ் மக்கள் வாக்குரிமையை பயன்படுத்தவேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தலவாக்கலை, வட்டகொடை பகுதியில் இடம்பெற்ற இன்று (10) தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது.
“ நாட்டில் ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலானது மிக முக்கியமானதாகும். நாட்டை ஆள்வதற்கு ஓர் ஆட்சிக்கட்டமைப்பு அவசியம். அதனை பாராளுமன்றம் மூலமே ஏற்படுத்த முடியும். ஜனாதிபதித் தேர்தலில் எமக்கு வீழ்ச்சி ஏற்பட்டிருந்தாலும் பாராளுமன்றத் தேர்தலில் எழுச்சி பெறவேண்டும். சஜித் பிரேமதாசவை பிரதமராக்கும் வகையில் வாக்களிக்க வேண்டும்.
பாராளுமன்றத்தில் பிரதமரே பலம் பொருந்திய நபர். அவரின் பரிந்துரைக்கமையவே அமைச்சரவை நியமிக்கப்படும். எனவே, கிடைத்துள்ள வாய்ப்பை நாம் நழுவவிடக்கூடாது. இம்முறை யானை இல்லை. தொலைபேசி சின்னமே இருக்கின்றது என்பதை நினைவூட்ட விரும்புகின்றேன்.
பல சின்னங்கள் இருக்கின்றன. குறிப்பாக கோடாரி இருக்கிறது. அது உங்களை வெட்டி சாய்த்துவிடும். எனவே, தொலைபேசி சின்னத்துக்கு வாக்களித்துவிட்டு, மூன்று விருப்பு வாக்குகளையும் தமிழ் முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு வழங்கவும்.
கடந்த நான்கரை வருடங்களில் எம்மால் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. மேலும் பல திட்டங்களை முன்னெடுத்தோம். ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தால் அவற்றை தொடர முடியாமல் போய்விட்டது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் புதிய ஆட்சி 6 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வருகின்றது. குறைந்தப்பட்சம் பொருட்களின் விலைகள் கூட குறைக்கப்படவில்லை. பல துன்பங்களை இந்த ஆட்சியின் கீழ் எதிர்கொள்ளவேண்டிய நிலை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
அமைச்சரவையில் ஒரு முஸ்லிம் உறுப்பினர் கூட இல்லை. தமிழ் மக்கள் சார்பில் இருந்த ஆறுமுகன் தொண்டமானும் உயிரிழந்துவிட்டார். எனவே, சிறுபான்மையின் பிரதிநிதிகள் இல்லாத அமைச்சரவையே இயங்குகின்றது. இந்நிலைமையை நீடிக்கவிடலாமா?
நடைபெறவுள்ள தேர்தலானது சிறுபான்மையின மக்களின் தலைவிதியை தீர்மானிக்கப் போகின்ற தேர்தலாகும். எமது இருப்பை, பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக்கொள்ளும் விதத்தில் வாக்களிக்க வேண்டும். வடக்கு, கிழக்கிலும் தமிழ்ப் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அப்போது தான் எமது எதிர்காலத்தை பாதுகாத்துக்கொள்ளமுடியும்.” –என்றார்.
-மலையக நிருபர் கிரிஷாந்தன்-