சில நாட்கள் நடித்த படங்களில் எல்லாம் நாயகனாக விளம்பரப்படுத்துதல் தொடர்பாக யோகி பாபு வேதனை தெரிவித்துள்ளார்.
தமிழ்த் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். மேலும், சில படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்துள்ளார்.
இதனிடையே சிலர் படத்தில் நடித்து முடித்தவுடன் தன்னை நாயகன் என்று விளம்பரப்படுத்துவது தொடர்பாக வேதனை தெரிவித்துள்ளார் யோகி பாபு. இது தொடர்பாக யோகி பாபு கூறியதாவது:
“பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். சில படங்களில் நட்புக்காக 10 நாட்கள் தேதிகள் ஒதுக்கி நடித்துக் கொடுக்கிறேன். ஆனால், நடித்து முடித்தவுடன் என்னை நாயகன் என்று விளம்பரப்படுத்துகிறார்கள். இதனால் படம் பார்க்க வருபவர்களும் ஏமாற்றம் அடைகிறார்கள்.
அதுமட்டுமன்றி இந்த மாதிரியான விளம்பரங்களால், வியாபார ரீதியாக பொதுவெளியிலும் பெரிய இமேஜ்ஜை உருவாக்குகிறார்கள். ஆகையால் இனிவரும் படங்களில் பெரியளவுக்கு விளம்பரப்படுத்தி எதிர்பார்ப்பை உண்டாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
ஏனென்றால் நகைச்சுவை நடிகர் என்ற முத்திரையுடனே மக்களிடம் சேர ஆசைப்படுகிறேன். அதை தற்காத்துக் கொள்ள அனைத்து வழிகளையும் பின்பற்றுவேன். இனி நடிக்கும் படங்களில் கூடுதல் கவனமாக இருக்க முடிவு செய்துள்ளேன்”
இவ்வாறு யோகி பாபு தெரிவித்துள்ளார்.