அரசியல் பழிவாங்கல் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு தமக்கு விடுக்கப்பட்ட உத்தரவை இரத்துச் செய்யக் கோரி மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
அவன்காட் நிறுவனத்தை அடிப்படையின்றிகையக்கப்படுத்தியதன் ஊடாக நட்டம் ஏற்பட்டுள்ளதாக அதன் தலைவர் நிசங்க சேனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.இதில் சாட்சியமளிக்க அநுரகுமார திஸாநாயக்க ஜூன் மாதம் ஆணைக்குழுவில் ஆஜரானார்.
அவன்கார்ட் நிறுவனத்தை தான்தோன்றித்தனமாக கையகப்படுத்தியதால் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து நிசங்க சேனாதிபதி முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைய ஜனாதிபதி ஆணைக்குழுவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த முறைப்பாடு தொடர்பில் சாட்சியம் பெற்றுக்கொள்வதற்காக முன்னாள் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, அர்ஜுன ரணதுங்க, பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க 17 பேருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.