அம்பாறை மாவட்டத்தில் கொக்கரிக்கின்ற கோடிஸ்வரன் ஏன் தமது மாவட்டத்தின் மக்களை கண் திறந்து பார்க்க முடியாமல் உள்ளார்? அவருக்கு நான் இன்று பெற்றுக்கொடுத்துள்ள சமாதானத்தினால்த் தான் இந்தளவு மேடைகளில் நின்று குரல்கொடுக்கக்கூடியதாக உள்ளது.
அவ்வாறு அல்லாமல் இருந்தால் அவர்களுக்கு கத்துவதற்கு குரல் இல்லாமல் இருந்திருக்கும். வரலாறுகளை மறந்து பேசுவதை கூட்டமைப்பு நிறுத்த வேண்டுமென கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.
கருணா அம்மான் அம்பாறையில் தமிழ் வாக்குகளை சிதறடிக்கவைப்பதற்காகவே இங்குவந்து போட்டியிடுகின்றார் என்றும் தனது வாக்கை தனக்கு அளிக்கமுடியாத கருணா அம்மான் என்று எல்லாம் விமர்சனங்கள் வருகின்றன. இதற்கெல்லாம் அஞ்சமாட்டேன். நான் மக்களின் அபிவிருத்திப் பணிகளை தொடர்ந்தும்முன்னெடுப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டத்தில் கடந்த 60 வருடங்களுக்கு முன்பு இருந்துவந்த 42 க்கும் மேற்பட்ட இந்து ஆலயங்கள் தற்போது அழிக்கப்பட்டு தடயங்களுடன் நிலம் மாத்திரம் காட்சியளிக்கின்றது. அது போன்று பழமைமிகு 22 கிராமங்கள் வேறுகிராமங்களுடன் உள்வாங்கப்பட்டு வருவதும் தன்னால் அவதானிக்கப்பட்டதன் பின்னர்தான் அம்பாறை மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட முடிவை எடுத்துக்கொண்டேன் என்றும் கருணா அம்மான் தெரிவித்தார்.
ஆலயங்கள் அளிக்கப்படுவதும் தமிழர்களின் பூர்விக நிலங்கள் அபகரிக்கப்படுவதுமாக நிலங்கள் அத்துமீறிய குடியேற்றங்கள் மற்றும் இயற்கை நீர்நிலைகளை நிறப்பி கட்டுமானப்பணிகளை முன்னெடுப்பது போன்ற நிகழ்ச்சி நிரல் தங்குதடையின்றி இடம்பெற்றுவருவது இந்த கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை கண்டு கொள்ளவில்லை. மாறாக மரக்கடத்தல்களும் மர ஆலைகளையும் அமைத்துக்கொண்டு தங்களின் பைகளை நிரப்புகின்றனர். இவர்கள் என்னை விமர்சிக்க தகுதியற்றவர்கள் என்றும் கருணா அம்மான் தெரிவித்தார்.
என்னுடைய வாழ்க்கையில் நான் என்னை விமர்சிப்பவர்கள் போன்று உல்லாசமாக வீடுகளில், ஏசி அறைகளில் வாழவில்லை இளமைக் காலத்தில் தமிழ் மக்களுக்காக போராட்டத்தின் போது காடுகளிலும் மலைகளிலும் வெயிலிலும் மழையிலும் தூக்கமின்றி என்னுடைய இளமைக்ககாலத்தை கழித்தவன். என்னுடைய சுயநலனைப் பாத்திருந்தால் நானும் மற்றவர்களை போன்று ஏசி அறையிலும் மின்விசிறிக்கு கீழும் தூங்கியிருப்பேன்.
என்னைப்பற்றி நான் சிந்திக்கும் போது வாழ்க்கையில் நான் சாதனை படைக்கவேண்டியவன். ஒரு வைத்தியராக மக்களுக்கு பணியாற்றியிருக்கவேண்டிய நான் இன்று காலத்தின் கட்டாயத்தால் இவ்வாறு அரசியலில் நிக்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளானேன் என்றும் கருணா அம்மான் கூறினார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் என்ன அபிவிருத்தியை செய்திருக்கின்றனர்? நல்லாட்சி அரசாங்கத்தின் சலுகைக்காக அவர்களின் கருத்துக்களுக்கு கையசைத்துக்கொண்டு சலுகையைப் பெற்றுக்கொண்டு மக்களின் நலன் பால் அக்கறை காட்டாதவர்கள் தான் இந் கூட்டமைப்பினர். இம்முறை சம்பந்தன் ஐயா 20 ஆசனங்களை பெறப்போவதாக கூவுகின்றார். ஆனால் மக்களின் தீர்ப்பு இம்முறை 13ஆசனங்களுக்கு மேல் பெறமுடியாது என்பதை நான் இந்தத் தேர்தல் காலத்தில் கூறிவைக்க விரும்புகின்றேன்.
நான் வேறுமனே வார்த்தை ஜாலங்களால் மக்களை ஏமாற்றுபவன் அல்ல. தேர்தல்காலங்களில் உணர்வுள்ள தமிழன் போன்று உணச்சியை கக்கித் திரியும் கூட்டமுமல்ல. மக்களுக்கு சொல்வதை செய்வதற்கான ஆணையை மக்கள் தருவார்களாயின் நான் மக்களின் தேவையுணர்ந்து செயல்படுவேன் என்றும் தெரிவித்தார்.