தமிழ் மக்களின் நீண்டகாலப் இனப் பிரச்சினைக்கு, ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமஷ்டிக் கொள்கைகளை உள்ளடக்கிய அரசியலமைப்பு ஏற்பாட்டின் மூலம் மட்டுமே இலங்கைத் தமிழர்கள் மற்றும் ஏனைய தமிழ் பேசும் மக்களின் நியாயமான அபிலாஷைகளை பூர்த்தி செய்ய முடியும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வலியுறுத்தியுள்ளது.
எதிர்வரும் 05ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் நிகழ்வு நேற்று யாழ்ப்பாணம் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இங்கு வெளியிட்டு வைக்கப்பட்ட விஞ்ஞாபனத்திலேயே மேற்படி விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி அவ் விஞ்ஞாபனத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,
அரசியல் தீர்வு தொடர்பான எமது நிலைப்பாடு
ஒரு ஜனநாயகத்தில் அரசாங்கம் என்பது ‘மக்களால் மக்களும் மக்களின் அரசாங்கமும் மக்களுக்கான அரசாங்கமும்’ ஆகும். இந்த அடிப்படையில் மட்டுமே ஒரு பங்கேற்பு ஜனநாயகம் நிறுவப்பட்டு நிலைத்திருக்க முடியும்.
எனினும், தமிழ் பேசும் மக்கள் சிங்களவருடன் இணைத்து தமது இறையாண்மையை அனுபவிக்க அரசியலமைப்பு வழிவகைகளை வழங்கவில்லை.
இந்த குறைபாட்டின் காரணமாக அவர்கள் அரசியல் அடிபணிதல், பொருளாதார மந்தநிலை மற்றும் கலாசார ஓரங்கட்டலுக்கு ஆளாகியுள்ளனர். நாம் இப் பாதகமான நிலைமையை ஒரு கூட்டு முயற்சியின் மூலம் மாற்றியமமைத்து, அரச முகவர்களின் சுரண்டல் மற்றும் அடக்குமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு முனைவோம்.
ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமஷ்டிக் கொள்கைகளை உள்ளடக்கிய அரசியலமைப்பு ஏற்பாட்டின் மூலம் மட்டுமே இலங்கைத் தமிழர்கள் மற்றும் தீவின் வடக்கு – கிழக்குப் பகுதிகளில் வசிக்கும் ஏனைய தமிழ் பேசும் மக்களின் நியாயமான அபிலாஷைகளை பூர்த்தி செய்ய முடியும். உண்மையில் அத்தகைய ஏற்பாடு அம்மக்களை நிலைநிறுத்துவதற்கு இன்றியமையாததாகிவிட்டது. கடந்த முப்பது ஆண்டுகளில் வரையப்பட்ட பாராளுமன்றத் தேர்வுக் குழுக்களின் பரிந்துரைகள் மற்றும் அவற்றை அடிப்படையாகக் கொண்ட அரசியலமைப்பு முன்மொழிவுகளை நோக்கும் போது, அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் ஓர் சமஷ்டி கட்டமைப்பை நோக்கி நகர்ந்துள்ளமை தென்படுகின்றது.
இத்தகைய முன்மொழிவுகளின் அடிப்படையிலேயே அரசாங்கங்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன, மேலும் எதிர்காலத்தில் வரவிருக்கும் எவ்வித சவால்களையும் பொருட்படுத்தாது நாங்கள் இம் முயற்சிகளை தொடர்ந்தும் முன்னெடுப்போம்.
தேசிய நல்லிணக்கத்தைக் கொண்டுவருவதற்கு நேர்மையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்போதெல்லாம், அதற்கீடாக பரஸ்பரமாக செயற்பட நாம் கடமைப்பட்டுள்ளோம்.மேற் கண்டவாறு கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதோடு மேலும் அதில் பல விடயங்கள் சொல்லப்பட்டுள்ளது.