ஒரு சில முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தமிழ் மக்களை திட்டமிட்டு ஓரம் கட்டும் தீவிரவாத போக்குடன் செயற்படுகிறார்கள். அதனையே நாம் எதிர்க்கிறோம். முஸ்லிம் மக்களுக்கு நாங்கள் எதிரானவர்களல்ல.அவர்களில் அப்பாவிகள் உள்ளனர். அவர்களை நாம் சகோதர இனமாக தான் பார்க்கின்றோமென கருணா அம்மான் தெரிவித்துள்ளார். வவுனியா, விருந்தினர் விடுதி ஒன்றில் நேற்று சுயேச்சைக் குழு 7 இல் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரின் அரசாங்கம் 20 வருடம் இருப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. பலமான எதிர்க்கட்சியொன்று வரும் என்பதே சந்தேகமாகவுள்ளதாகவும் தெரிவித்தார்.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வந்த போது காப்பாற்றிய கூட்டமைப்பு முஸ்லிம் தலைவர்களுக்கு அமைச்சு பதவியையும் பெற்றுக் கொடுத்தார்கள். இதற்கு 02 கோடி ரூபாயை இலஞ்சமாகவும் பெற்றார்கள். அண்மையில் தமிழரசுக் கட்சியின் மகளிர் அணித் தலைவி 21 கோடி ரூபாய் மக்களுக்கு உதவி செய்ய வந்த பணம் தொடர்பில் தெரிவித்திருந்தார். அதில் ஒரு போராளிக்கு கூட உதவி செய்யவில்லை. அந்தப் பணத்தைக் கூட கொள்ளையடித்துள்ளார்கள். இதுபோல தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றி வருகின்றனர். தமிழ் மக்களது உரிமைக்காக குரல் கொடுப்பதற்காகவே தேசிய கட்சியில் இருந்து விலகி தனித் தமிழ் கட்சியாக செயற்படுகின்றோம். அத்துடன் வருகின்ற அரசாங்கத்துடன் ஒரு இணக்க அரசியலை செய்வதை விரும்புகின்றோம். அதன் மூலம் தான் மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும். பொருளாதாரம் நலிவடைந்து செல்லும் போது தேசியம் எனப் பேசிக் கொண்டிருந்து மிகவும் பின்தங்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதனால் இரண்டையும் சமாந்தரமாக கொண்டு போக வேண்டும்.
வவுனியா விசேட நிருபர்