குற்றப் பரம்பரை’ படத்தின் உருவாக்கத்தால் ஏற்பட்ட சண்டைகளால் பிரிந்த, பாரதிராஜாவும் பாலாவும் இப்போது சமரசமாகிவிட்டனர் என்று தெரியவந்துள்ளது.
நேற்று (ஜூலை 17) இயக்குநர் பாரதிராஜா தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். இந்நிலையில் பாரதிராஜாவுக்கு தாதா சாகேப் பால்கே விருது கொடுக்க வேண்டும் என்று தமிழ்த் திரையுலகினர் ஒன்றிணைந்து மத்திய அமைச்சருக்குக் கடிதம் எழுதினர். அதில் தேசிய விருது வென்ற பல திரையுலகினரின் பெயர் இருந்தது. அந்தப் பட்டியலில் இயக்குநர் பாலாவின் பெயரைப் பார்த்தபோது பலருக்கும் ஆச்சரியம்தான்.
ஏனென்றால், சில ஆண்டுகளுக்கு முன்பு ‘குற்றப் பரம்பரை’ கதையை முன்வைத்து இயக்குநர் பாரதிராஜா – பாலா இருவருமே தனித்தனியாகப் படமெடுக்கத் திட்டமிட்டார்கள். இதனால் இருவருக்குள்ளும் மோதல் வெடித்தது. பாரதிராஜா அளித்த பேட்டிகள், பாலா பத்திரிகையாளர் சந்திப்பு என்று நடந்த சம்பவங்கள் அனைத்துமே பலருக்கும் தெரியும்.
இப்போது பாரதிராஜாவுக்கு தாதா சாகேப் பால்கே விருதுக்காகப் பரிந்துரைத்தவர்களின் பட்டியலில் பாலா பெயர் இருப்பது தொடர்பாக தமிழ்த் திரையுலகில் விசாரித்தோம்.
“சில மாதங்களுக்கு முன்பு பாரதிராஜா – பாலா இருவரும் சந்தித்துப் பேசி சமரசமாகி விட்டார்கள். இருவருக்குள்ளும் இப்போது எந்தவித பிரச்சினையுமில்லை” என்று தெரிவித்தார்கள்.
சினிமாவில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.