கிஷோர் நடிக்கிறார் வெப் தொடராகும் வீரப்பன் வாழ்க்கை
சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கை ஏற்கனவே ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்கத்தில் வனயுத்தம் என்ற பெயரிலும் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் வில்லாதி வில்லன் வீரப்பன் என்ற பெயரிலும் திரைப்படங்களாக வெளிவந்தன. வனயுத்தம் படத்தில் வீரப்பனாக கிஷோரும் போலீஸ் அதிகாரியாக அர்ஜுனும் நடித்து இருந்தனர். இந்த படம் தணிக்கை குழுவின் எதிர்ப்பில் சிக்கி பல காட்சிகளை நீக்கிய பிறகே திரைக்கு வந்தது.
இந்த நிலையில் வீரப்பன் வாழ்க்கை கதையை வெப் தொடராக எடுக்கப் போவதாக டைரக்டர் ஏ.எம்.ஆர். ரமேஷ் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “வன யுத்தம் படத்தில் வீரப்பன் வாழ்க்கை கதையை முழுமையாக வெளிப்படுத்த முடியவில்லை. நிறைய காட்சிகளை தணிக்கை குழுவினர் நீக்கி விட்டனர். இதனால் வெப் தொடராக எடுக்க இருக்கிறேன். வெப் தொடருக்கு தணிக்கை இல்லை என்பதால் வீரப்பனின் முழு வாழ்க்கையையும் தொடரில் கொண்டு வருவேன். போலீஸ் அதிகாரிகள், வீரப்பனுடன் பழகியவர்கள் போன்றோருடன் பேசி நிறைய தகவல்கள் திரட்டி வைத்துள்ளேன். அவை அனைத்தும் வெப் தொடரில் இடம்பெறும்.
இந்த தொடரில் வீரப்பன் கதாபாத்திரத்தில் கிஷோர் நடிக்கிறார். மேலும் பலர் நடிக்க இருக்கிறார்கள். அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந்தேதி படப்பிடிப்பு தொடங்கும். தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் இந்த தொடர் வெளிவரும்” என்றார்.