பிரதமர் நரேந்திர மோடி அரசின் துரோகத்தை ஆதரிக்கிறீர்களா? என நடிகர் ரஜினிகாந்துக்கு, காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
கருப்பர் கூட்டம் யூ-டியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் செந்தில்வாசன், சுரேந்திரன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் சென்னையில் உள்ள கருப்பர் கூட்டம் அலுவலகத்திற்கு போலீசார் சீல் வைத்தனர்.
இதற்கிடையில் கருப்பர் கூட்டம் யூ-டியூப் பக்கத்தில் மத உணர்வை புண்படுத்தும் வகையில் பல வீடியோக்கள் இருந்ததால் அந்த சேனலில் இருந்து 500க்கும் மேற்பட்ட வீடியோக்களை சைபர் கிரைம் போலீசார் அதிரடியாக நீக்கினர். இந்த விவகாரம் குறித்து பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
இந்த நிலையில் கந்த சஷ்டி கவசத்தை மிக கேவலமாக அவதூறு செய்து, பல கோடி தமிழ் மக்களின் மனதை புண்படுத்தியுள்ளனர் என்று நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மேலும் இந்த செயலை செய்தவர்கள் மீது வாழ்க்கையில் மறக்க முடியாதபடி தூரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
“இனிமேலாவது மதத்துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்..ஒழியணும். எல்லா மதமும் சம்மதமே.. கந்தனுக்கு அரோகரா” என்று அவர் பதிவிட்டிருந்தார். நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்துக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட பலர் பாராட்டு தெரிவித்தனர்.
இந்நிலையில் இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி, “பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு இடஒதுக்கீட்டை ரத்து செய்திருப்பதன் மூலம், லட்சக்கணக்கான மாணவர்களின் மருத்துவ கனவில் மண் அள்ளிப் போட்டிருக்கிறது” என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை 70 சதவீதம் என்றும், இது தேசிய அளவில் 52 சதவீதம் என்றும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
மேலும், “அவ்வப்போது கருத்து சொல்லியே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ள தங்களுக்கு, இது பற்றி கருத்தே இல்லையா? அல்லது மோடி அரசின் துரோகத்தை ஆதரிக்கிறீர்களா?” என்று ஜோதிமணி எம்.பி. பகிரங்கமாக கேள்வி எழுப்பியுள்ளார்.