கொரோனா தடுப்பூசி டிசம்பர் மாதத்துக்குள் தயாராகிவிடும் என்றும், அதன் விலை 1,000 ரூபாயாக இருக்கும் என்றும் இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனம் அறிவித்து உள்ளது.
இன்றைக்கு உலகின் பொது எதிரியாக மாறி இருக்கிற கொரோனா வைரஸ் தொற்று நோயை தடுப்பதற்கு உலக அளவில் தடுப்பூசிகளை உருவாக்கும் முயற்சி முழுவீச்சில் நடந்து வருகிறது.
அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இந்த முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன. தற்போதைய நிலவரப்படி இதில் இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் முந்துகிறது. இங்கிலாந்து அரசு மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து இந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள தடுப்பூசி, பிற எந்த தடுப்பூசியையும் விட நம்பகத்தன்மை அளிப்பதாக தெரியவந்து உள்ளது.
கொரோனா வைரசை வீழ்த்துவதற்கான ஆன்டிபாடிகளையும், டி செல்களையும் ஒரு சேர இந்த தடுப்பூசி உருவாக்குவது இரட்டை பாதுகாப்பு என விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.
இந்த தடுப்பூசியை இந்தியாவில் தயாரிப்பதற்கு மராட்டிய மாநிலம், புனேயைச் சேர்ந்த இந்திய சீரம் இன்ஸ்டிடியூட், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் செய்து உள்ளது.
சீரம் இன்ஸ்டிடியூட்டின் தலைவர் டாக்டர் சைரஸ் பூனவாலா, நேற்று புனே நகர மகளிர் அமைப்பினருடன் ஆன்லைன் வழியாக கலந்துரையாடினார்.
அப்போது இந்த தடுப்பூசி பற்றி அவர் கூறியதாவது:-
எங்கள் நிறுவனம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடனும், அதன் கூட்டாளியான அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனத்துடனும் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டு உள்ளது. தடுப்பூசி பரிசோதனை அளவில் இருந்து வருகிறது. இது விரைவில் வெளியிடப்படும். இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் தடுப்பூசி தயாராக இருக்கும்.
தடுப்பூசியை பாதுகாப்பானதாகவும், நல்ல செயல்திறன் கொண்டதாகவும், எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் உருவாக்குவதற்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். தடுப்பூசியின் அவசரம் கருதி பிற தயாரிப்பு பணிகளை நிறுத்த தீர்மானித்து இருக்கிறோம். சரியான ஒப்புதல்களை பெற்ற பின்னர் பெரிய அளவில் தடுப்பூசிகள் தயாரிக்கப்படும்.
இதற்காக, 1000 கோடி ரூபாய்க்கு மேல் வழங்குவதாக அரசு உறுதி அளித்து உள்ளது. ஏழை மக்களும் பெற்று பயன்பெறத்தக்க அளவில் மலிவான விலையில் தடுப்பூசி கிடைக்கச்செய்ய விரும்புகிறோம். இந்தியா தவிர்த்து, ஆப்பிரிக்கா போன்ற வளர்ச்சி அடையாத நாடுகளிலும் இந்த தடுப்பூசியை கிடைக்கச்செய்ய வேண்டும் என்பது எங்கள் விருப்பம்.
சில லட்சம் தடுப்பூசி ‘டோஸ்‘கள் இந்தியாவுக்கு போதுமானதாக இருக்காது. எனவே தேவையான ஒப்புதல்களைப் பெற்று குறைந்தது 100 கோடி ‘டோஸ்‘ தடுப்பூசியை தயாரிக்க நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
“தடுப்பூசியின் உற்பத்தி திறன் அல்லது வெளியீட்டில் ஏதாவது பின்னடைவுகளோ, தோல்வியோ ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டா?“ என்று சைரஸ் பூனவாலாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதில் அளிக்கையில், “இந்த தடுப்பூசி திட்டத்தில் நாங்கள் 10 கோடி டாலருக்கு மேலாக (சுமார் ரூ.750 கோடி) செலவு செய்கிற போது, தோல்விக்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. நாங்கள் ஒப்புதல்கள் பெற்று, பாதுகாப்பு மற்றும் செயல்திறனுக்கான சோதனைகளை வெற்றிகரமாக செய்து முடித்து விட்டால், நிறைய நிறுவனங்கள் தடுப்பூசியை தயாரிக்கும்.
உலகிலேயே இந்தியாதான் கொரோனா வைரசுக்கான மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளராக இருக்கும்” என்று கூறினார்.
மேலும், “எங்கள் இந்திய செரம் நிறுவனத்தின் ஊழியர்கள் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்படும் ஆபத்து இருப்பதால், முதலில் அவர்களுக்கு தடுப்பூசியை வினியோகிக்க அரசின் அனுமதியை கேட்டு இருக்கிறோம்” என்றும் சைரஸ் பூனவாலா கூறினார். தொடர்ந்து அவர் கூறுகையில், “கொரோனா வைரஸ் பிறழ்வுக்கான எந்த ஆதாரமும் இல்லை.
இது தொடர்பான கோட்பாடுகளை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். தடுப்பூசி இன்னும் தயாரிக்கப்படவில்லை என்றாலும், பக்க விளைவுகள் இல்லாத, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பி.சி.ஜி. தடுப்பூசியை பயன்படுத்த நான் பலமாக முன்மொழிகிறேன். ஓமியோபதி மருந்துகளை விட இது சிறப்பானது” என்றும் குறிப்பிட்டார்.
சீரம் இன்ஸ்டிடியூட்டின் தலைமை செயல் அதிகாரியும், டாக்டர் சைரஸ் பூனவாலாவின் மகனுமான ஆதர் பூனவாலா, கொரோனா தடுப்பூசியின் விலை 1,000 ரூபாய்க்கு சற்று குறைவாக இருக்கும் என்று கூறி உள்ளார். ஆதர் பூனவாலா ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக்குடன் நேற்று காணொலி காட்சி மூலம் பேசினார். அப்போது அவர், வருகிற அக்டோபர் அல்லது நவம்பருக்குள் தடுப்பூசி தயாராகிவிடும் என்று தெரிவித்தார்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தடுப்பூசியின் முதல் கட்ட சோதனை வெற்றிகரமான முடிந்து விட்டதும், இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட பரிசோதனை ஆஸ்திரியாவில் நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.