காலமும் சமயமும் தேவனின் கரத்தின் கிரிiயில் தங்கியிருக்கிறது.
சகோ. பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை.
ரெகொபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம்.
அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்.
பிரசங்கி 3:11.
(தமிழ் தொலைக்காட்சிகளில் அண்மைக் காலங்களில் வெளிவரும் ஏமாற்றான விளம்பரத்தை நம்பி தமிழ்மக்கள் ஏமாற்றம் அடையாதிருக்கும்படியாக இந்த தியானத்தை உங்களின் நன்மை கருதி எழுதுகிறேன். வாசித்து அறிந்து ஏமாற்றத்தில் இருந்து உங்களைக் காத்துக்கொள்ளவும்).
இன்று மனிதர்கள் காலம் என்ற சொல்லைக் கேட்டவுடனே கைரேகை நிபுணர்களை நாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதிலும் ஐரோப்பாவில் வாழும் பல தமிழர்கள் காலத்தை நல்லதாக மாற்ற அதிகளவு பணத்தையும் பொருட்களையும் செலவழித்து மிகுந்த துன்பங்களை அடைந்துள்ளனர். பாரிஸ், இலண்டன் போனால் வீதியோரங்களில் ஏமாற்றுபவர்களைக் காணலாம். இவ்வாறன சூழ்நிலைகளில் இருந்து ஐரோப்பாவில் வாழும் தமிழர்கள் தப்பி வாழும்படியாக ஓர் ஆலோசனையாக இதனை எழுதுகிறேன்.
நித்தியத்தை ஆயத்தப்படுத்துவதற்காகவே தேவன் காலத்தைப் படைத்தார். நமது நித்தியம் மோட்சத்திலா நரகத்திலா என்பதை நிர்ணயிக்கும் காலமாக நமது இவ்வுலக வாழ்வுக்காலம் உள்ளது இந்த உண்மையை அறியாத நாம் காலத்தைக் குறித்து தவறாக இடைபோட்டு வாழ்ந்து வருகிறோம்.
ஆதியாகமம் 1ம் அதிகாரத்தில் முதன்முதலாக காலம் என்றசொல் இடம் பெறுகிறது. தேவன் தமது படைப்பின் முடிவில் நாட்களையும் காலத்தையும் குறிப்பிட்டார். அதே போல மனித வாழ்வின் முழுமையைக் குறிக்கும்படியாக பிரசங்கி 3ம் அதிகாரத்தில் 1-11 வசனம்வரை உலகில் மனிதனுக்கு ஏற்படக்கூடிய அனைத்து அனுபவங்களையும் காலத்தின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு, வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு. பிறக்க ஒரு காலமுண்டு, இறக்க ஒரு காலமுண்டு. நட ஒரு காலமுண்டு, நட்டதைப் பிடுங்க ஒரு காலமுண்டு. கொல்ல ஒரு காலமுண்டு, குணமாக்க ஒரு காலமுண்டு. இடிக்க ஒரு காலமுண்டு, கட்ட ஒரு காலமுண்டு. அழ ஒரு காலமுண்டு, நகைக்க ஒரு காலமுண்டு. புலம்ப ஒரு காலமுண்டு, நடனம்பண்ண ஒரு காலமுண்டு. கற்களை எறிந்துவிட ஒரு காலமுண்டு, கற்களைச் சேர்க்க ஒரு காலமுண்டு.
தழுவ ஒரு காலமுண்டு, தழுவாமலிருக்க ஒரு காலமுண்டு. தேட ஒரு காலமுண்டு, இழக்க ஒரு காலமுண்டு. காப்பாற்ற ஒரு காலமுண்டு, எறிந்துவிட ஒரு காலமுண்டு. கிழிக்க ஒரு காலமுண்டு, தைக்க ஒரு காலமுண்டு@ மவுனமாயிருக்க ஒரு காலமுண்டு, பேச ஒரு காலமுண்டு. சிநேகிக்க ஒரு காலமுண்டு, பகைக்க ஒரு காலமுண்டு. யுத்தம்பண்ண ஒரு காலமுண்டு, சமாதானம்பண்ண ஒரு காலமுண்டு.
வருத்தப்பட்டுப் பிரயாசப்படுகிறவனுக்கு அதினால் பலன் என்ன? மனுபுத்திரர் பாடுபடும்படி தேவன் அவர்களுக்கு நியமித்த தொல்லையைக் கண்டேன். அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார். உலகத்தையும் அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார். ஆதலால் தேவன் ஆதிமுதல் அந்தம் மட்டும் செய்துவரும் கிரியையை மனுஷன் கண்டுபிடியான்.
இவை பிறப்பில் இருந்து இறப்புவரை விரிந்திருப்பதை நாம் காணலாம். இப்பொழுது நீங்கள் எந்த காலகட்டத்தில் இருக்கிறீர்கள்? நீங்கள் உங்கள் காலகட்டத்தை எப்படி பயன்படுத்துகிறீர்கள்? காலம் உங்களுக்கு எதை வைத்துக்கொண்டு காத்திருக்கிறது? ஒரு வேளை நாம் வாசித்த 11 வார்த்தைகளில் உங்கள் கேள்விக்கான பதில் இருக்கலாம்.
நாம் மேலே வாசித்த பகுதியில் முதலில் காணப்படுவது, ஒவ்வொன்றிற்கும் காலமும், சமயமும் உண்டென்று. அதாவது காலம் என்பது ஒரு பருவகாலத்தையும், சமயம் என்பது குறிப்பிட்ட நேரத்தையும் குறிக்கிறது. இதிலிருந்து நாம் விளங்கிக் கொள்ள வேண்டியது, ஒவ்வொன்றிற்கும் பருவகாலமும், ஆரம்பமும் முடிவும் உண்டென்பதை.
வாழ்க்கைச் சக்கரத்தில் கர்ப்பகாலம் ஒரு பருவகாலம். குழந்தைப்பருவம் ஒரு பருவகாலம். வாலிபப்பருவம் ஒரு பருவகாலம். நடுவயதுப்பருவம் ஒரு பருவகாலம். முதுமைப்பருவம் ஒரு பருவகாலம். இதனைத்தொடர்ந்து மரணம் இவை எல்லாம் இயற்கையானது மட்டுமல்ல, ஆண்டவரால் நியமிக்கப்பட்டவை. இவைகள் நீடிப்பதில்லை. சமயம் என்பது நேரத்தைக் குறிக்கிறது. அதாவது இளைஞன் ஒரு பெண்ணை காதலிக்கிறான். அது வாலிப பருவத்தின் காலம். ஆனால் ஒரு குறிப்பிட்ட சமயம் (நேரம்) வந்தவுடன் திருமணம் செய்து கொள்கிறான். இப்பொழுது புரிந்திருப்பீர்கள் காலம் நேரத்தின் வேறுபாட்டை.
இதேபோலவே தேவனும் மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் காலத்தையும் நேரத்தையும் வௌ;வேறாக வைத்திருக்கிறார். அதன் நிமித்தமாக தேவன் ஒவ்வொருவருக்கும் வௌ;வேறுபட்ட காலத்தில் வெளிப்படுகிறார். தம்மை அறிந்து கொள்ளும் காலமும் சமயமும் வந்தவுடன் அவரவருக்கு அழைப்பு விடுகிறார்.
அந்த அழைப்பை ஏற்று தேவனுக்கு கீழ்படிய வருகிறாயா? இதை வாசித்துக் கொண்டிருக்கும் நேயர்களே இதுதான் உங்களது காலமும் நேரமும். அந்த அழைப்பிற்கு கீழ்படிவாயாக இருந்தால் உனது வாழ்க்கையில் நீயே மாற்றத்தைக் காண்பாய். அந்த மாற்றத்தைக்காண என்னுடன் சேர்ந்து இந்த ஜெபத்தை தேவனிடம் ஒப்புக்கொடு.
அன்பின் பரலோக பிதாவே, இன்று உமது காலத்தையும் நேரத்தையும் குறித்து நான் அறிய உதவியதற்காக உமக்கு நன்றி அப்பா. நான் உம்மைத்தேடும் காலமாக இன்றைய வாரத்தை நீர் தெரிந்தெடுத்ததற்காக நன்றி அப்பா. உம்மைத்தேடி உமக்குள் நான் வாழ உதவி செய்யும்படியாக இயேசுவின் நாமத்தில் வேண்டுகிறேன் நல்ல பிதாவே, ஆமென்.
கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!
Bro. Francis T. Anthonypillai. Rehoboth Ministries – Praying for Denmark.