எதிர்ப்பு அரசியல் நடத்துவதால் தமிழருக்கு எந்தப் பயனுமில்லை

எதிர்ப்பு அரசியல் நடத்துவதால் தமிழர்களுக்கு எந்தப் பயனும் ஏற்பட்டு விடப் போவதில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எதிர்ப்பு அரசியல் செய்து எமது மக்களை இன்று அரசியல் அநாதைகளாக எம்முன்னே நிறுத்தியுள்ளனர். உணர்ச்சி பொங்கும் வார்த்தைகளுக்கு மக்கள் இனிமேல் அடிபணியப் போவதில்லை.’

இவ்வாறு பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளருமான பரமசிவம் சந்திரகுமார் தெரிவித்தார்.

கேள்வி: -நீங்கள் திடீரென அரசியலுக்குள் பிரவேசித்த காரணம் என்ன?

பதில்: -கடந்த 30 வருடங்களுக்கு மேலாக எமது மக்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்தார்கள். யுத்தம் முடிவுற்ற சுமார் 11 வருடங்களிலும் கூட அவர்களுக்கான நியாயமான அரசியல் உரிமைகளும் அடிப்படைத் தேவைகளும் நிறைவேற்றப்படவில்லை. இவற்றுக்கெல்லாம் காரணம் எமது மக்களின் தலைமைகள் என்று கூறிக் கொண்டு காலம் முழுவதும் எதிர்ப்பு அரசியல் செய்பவர்கள் ஆவர். தத்தமது தேவைகளை நிறைவு செய்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே அவர்கள். இதனை யாரும் மறுக்க முடியாது. இதனை உணர்ந்த நான் அரசியலில் பிரவேசித்துள்ளேன். தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வரும் எம் தமிழ் மக்களுக்கு இணக்கப்பாட்டுடன், அரசுடன் இணைந்து சேவையாற்றவே அரசியல் களம் இறங்கியுள்ளேன். இது தவிர அரசியலை வைத்து பிழைப்பு நடத்த வேண்டிய தேவையும் எனக்கில்லை.

கேள்வி: – பொதுஜன பெரமுன கட்சியினூடாக நீங்கள் மொட்டுச் சின்னத்தில் வேட்பாளராக களமிறங்கியுள்ளீர்கள். இக்கட்சி மீது தங்களுக்கு ஈர்ப்பு ஏற்பட்டதற்கான காரணம் என்ன?

பதில்: – இந்த நாட்டில் எத்தனை கட்சிகள் மாறி மாறி ஆட்சி அமைத்தாலும் பொதுஜன பெரமுன கட்சியினூடாகவே எமது மக்களின் தேவைகளை நிறைவு செய்து கொள்ள முடியும். இது விடயத்தில் நான் உறுதியாக உள்ளேன். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்‌ஷ ஆகியோரின் வழிகாட்டலின் பேரில் நான் சேவையாற்றி வருகின்றேன். இவர்களெல்லாம் ஆளுமை, நிர்வாகத் திறன் படைத்தவர்கள். எமது மக்களின் தேவைகளை நிறைவு செய்து கொடுக்க வேண்டும் என்பதில் அவர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். அவர்களுடனான எனது நெருங்கிய தொடர்பாடலின் ஊடாக நான் இதனை இவ்விடத்தில் கூறிக் கொள்ள வேண்டும். இதன் காரணமாகவேதான் முழுக்க முழுக்க இக்கட்சியினை நான் நம்புகின்றேன். எனது பணியில் எமது மக்கள் பங்குதாரர்களாக கைகோர்க்க வேண்டிய தருணமிது.

கேள்வி: – மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி பணிகள் எவை? நீங்கள் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் போது அதனை எவ்வாறு முன்னெடுக்கப் போகிறீர்கள்?

பதில்: – மட்டக்களப்பு மாவட்டத்தில் எமது தமிழ் மக்களைப் பொறுத்த வரை மிக நீண்ட காலமாக தமிழ் அமைச்சர் ஒருவர் இல்லாத பெரும் குறை இருக்கின்றது. இதனை எமது மக்கள் உணர்ந்துள்ளனர். எந்தக் கட்சியில் நாங்கள் இணைந்தால் வெல்ல முடியுமோ அக்கட்சியிலே இணைந்து போட்டியிடுகிறேன். இந்த மாவட்டத்தில் யுத்தத்தின் பின் சகல துறைகளையும் அபிவிருத்தி செய்ய வேண்டியுள்ளது. கல்வி, சுகாதாரம், மக்களின் அன்றாட வாழ்வாதாரம் என்பவற்றை வளம்மிக்கதாக்க வேண்டும். அத்துடன் சமூகச் சீர்கேடு சீர் செய்யப்பட வேண்டும். சமய விழுமியங்கள், கலை கலாசாரம் பாதுகாக்கப்பட வேண்டும். நிச்சயமாக இந்த மாவட்டத்தில் தமிழ் அமைச்சர் ஒருவரை பெறுவதன் மூலம் இதனை குறுகிய காலத்துக்குள் இக்கட்சியின் ஆதரவுடன் பெற்றுக் கொள்ள முடியும்.

கேள்வி: -தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் நகர்வு தமிழ் மக்களின் அபிலாசைகளை தீர்த்து வைக்க தவறி விட்டது என்பதுதான் இன்று பலராலும் பேசப்படுகின்றது.இதனை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்: – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எத்தனை பேர் பாராளுமன்றம் சென்றாலும் மக்களது தேவைகளை அவர்களால் நிறைவு செய்ய முடியாதென்பதை அவர்களுடைய காலத்திலே நிரூபித்து விட்டார்கள். இரு கரங்களையும் உயர்த்தி உயர்த்தி தங்களது இருப்புக்காக சகலதையும் பெறுவார்களே தவிர அவர்களால் ஆனது ஒன்றுமில்லை. ஆகவே தேசிய அரசாங்கத்தினூடாக இணக்கப்பாட்டுடன் மூலமாகவே நாம் எமது மக்களுக்கு சேவை செய்ய முடியும். அரசாங்கம்தான் எமது மக்களுக்கு உதவ முடியும். தமிழ்க் கூட்டமைப்பினரால் அது முடியாது என்பது வரலாற்றுப் பாடம்.

கேள்வி: – இந்த மாவட்டத்தில் குறிப்பாக படித்த இளைஞர்கள், யுவதிகள் போன்றோருக்கான விசேட திட்டங்கள் ஏதும் உண்டா?

பதில்: – நிச்சயமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இளைஞர்களுக்கான தொழிற் பயிற்சி நிறுவனங்களை அமைத்து அதனூடாக பயிற்சிகளை வழங்கி அவர்களின் குடும்ப வருமானத்தை அதிகரிக்கும் திட்டங்களை வகுத்துள்ளார். இளைஞர்களின் கல்வித் தரத்திற்கேற்ற வகையில் அவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த திட்டம் வகுத்துள்ளார்.கடந்த ஆட்சியில் நான்கரை வருடங்களில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை.

ஆனால் எமது அரசாங்கம் பதவியேற்று குறுகிய காலத்துக்குள் பெருமளவிலான பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பினை வழங்கியது. அதன் தொடர்ச்சியாக ஏனைய பட்டதாரிகளுக்கும் நாடாளுமன்ற தேர்தல் முடிவுற்றதும் அரசாங்கம் வேலைவாய்ப்பு வழங்கும். அனைத்து பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்பினை வழங்குவதற்கு ஜனாதிபதி வாக்குறுதி அளித்துள்ளார். அது நிச்சயமாக நிறைவேறும்.

கேள்வி: – வாழைச்சேனை காகிதஆலையின் மீள் இயக்கத்துக்கு தங்களின் வகிபாகமும் பிரதான காரணம் என பலரும் கூறுகின்றனர். இக்காகிதஆலையை திறம்பட இயங்க வைப்பதற்கான தங்களின் முயற்சிகள் எவ்வாறிருக்கின்றன?

பதில்: எனது ஐந்து வயதிலிருந்தே இத்தொழிற்சாலை என் நினைவில் உள்ளது. மட்டக்களப்பில் ஒரு தொழிற்சாலை என்றால் அது வாழைச்சேனை காகிதஆலையாகத்தான் இருக்க முடியும். மனதில் பதிந்த ஒரு விடயம் அது. இதனை முழுமையாக இயங்க வைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்‌ஷ மற்றும் கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்‌ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோர் எமக்கு தேர்தலுக்கு முன்பதாக வாக்குறுதிகளை அளித்தார்கள். இந்தத் தொழிற்சாலை கிழக்கு மாகாணத்தின் பாரியதொரு சொத்து. கல்குடா தொகுதியை சேர்ந்த கூடுதலான மக்கள் இதனால் நன்மையடையப் போவது மாத்திரமன்றி என்னுடைய அவாவும் அதுவாகத்தான் இருக்கின்றது.

கேள்வி: – உங்களது வெற்றி வாய்ப்பு எவ்வாறு உள்ளது? மக்களின் ஆதரவு பொதுஜன பெரமுன கட்சியின் பால் ஈர்க்கப்பட்டுள்ளதாக நீங்கள் கருதுகின்றீர்களா?

பதில்: -நிச்சயமாக மட்டக்களப்பில் பாரியதொரு மாற்றம் வந்திருக்கின்றது. இலங்கை சுதந்திரம் அடைந்ததற்குப் பின்னர் மட்டக்களப்பில் ஆளும் கட்சியில் ஒரு தமிழ் அமைச்சர் உருவாக வேண்டும் என்பதை எமது மக்கள் உணர்ந்துள்ளார்கள். நிச்சயமாக என்னை மக்கள் வெற்றி பெறச் செய்வார்கள். பாராளுமன்ற எனது பிரதிநிதித்துவத்தின் மூலமாக மக்களுக்கு சேவை செய்யும் காலம் நெருங்கி விட்டது. இதனை நான் உறுதியாக இவ்விடத்தில் கூறிக் கொள்கிறேன்.

அதேசமயம், மட்டக்களப்பு மக்களை திசைதிருப்புவதற்காக பல வேட்பாளர்கள் பல்வேறு திசைகளிலும் களம் இறங்கி இருந்தாலும் ஆளும் கட்சியை ஆதரிக்க வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர். போலியான பிரசாரமோ, தேசியமோ, உணர்ச்சி பொங்கும் வார்த்தைகளோ, அற்பசொற்ப சலுகைகளுக்கோ எமது மக்கள் இனிமேலும் அடி பணியப்போவதில்லை. அக்காலம் மலை ஏறிவிட்டது. இம்முறை மக்கள் மிகத் தெளிவாக இருப்பதனை நாம் உணர்ந்துள்ளோம்.

(நவம்)

Related posts