தமிழ் சினிமாவிலும் வாரிசு அரசியல் உள்ளது என்று சாந்தனு குற்றம் சாட்டியுள்ளார்.
சுஷாந்த் சிங் தற்கொலைக்குப் பிறகு பாலிவுட்டில் வாரிசு அரசியல் சர்ச்சை பெரிதாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. வாரிசு அரசியல் தொடர்பாக அனைத்துத் திரையுலகிலிருந்தும் முன்னணி நடிகர்கள் கருத்துத் தெரிவித்து வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு ஏ.ஆர்.ரஹ்மான் வைத்த குற்றச்சாட்டும் பெரும் விவாதமாக உருவெடுத்தது.
இதனிடையே தமிழ்த் திரையுலகில் வாரிசு அரசியல் இருக்கிறதா என்பது குறித்து ஒளிப்பதிவாளர் நட்ராஜ், “தமிழ் சினிமாவில் வாரிசு அரசியல் இருக்கிறதா, இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் குழு அரசியல் இருக்கிறது. யாருக்கு என்ன கிடைக்க வேண்டும் என்பதை யாரோ நிர்ணயிக்கிறார்கள். யாரு நீங்க?” என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்தார்.
நட்ராஜின் ட்வீட்டைக் குறிப்பிட்டு சாந்தனு தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“வாரிசு அரசியல் இங்கேயும் உள்ளது. அதே குழு அரசியல் நபர்கள்தான் நம்முடன் யார் வேலை செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிப்பார்கள். தரத்தைப் பராமரிக்க அவர்கள் ஒரு சிலரை ஆதரிக்கிறார்கள், தங்கள் தரத்தை அதிகரிக்க மற்றவர்களை அனுமதிக்க மாட்டார்கள்”.
இவ்வாறு சாந்தனு தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவிலும் வாரிசு அரசியல் இருக்கிறது என்று சாந்தனு கூறியிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.