நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் ஆளுந்தரப்புக்குள் பிளவுகள் ஏற்பட்டதனால் அரசியல் தீர்வுக்கான கருமங்களை நிறைவேற்ற முடியாமல் போனதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கையின் ஆட்சிஅதிகார முறையில் மாற்றம் வேண்டுமென்பதில் சர்வதேச சமூகம் உறுதியாக உள்ளதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தமிழர்களது பிரச்சினை தீர்க்கப்படவேண்டுமென்பதை சர்வதேச சமூகம் வலியுறுத்துகின்றது. எனவே நாம் சர்வதேச ரீதியாக பலமாகயிருக்கின்றோமென அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஆட்சி அதிகார முறை அடிப்படையில் மாற்றியமைக்கப்பட்டு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு அந்தந்த பிராந்தியங்களில் வாழும் மக்கள் அந்த அதிகாரங்களை பயன்படுத்தி பொருளாதார ரீதியில் சமூக, சமய, கலாசார ரீதியில் முன்னேற வேண்டுமென்பதில் மக்கள் உறுதியாகயிருக்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதனை புதிய பாராளுமன்றத்தில் தாமதமின்றி முன்னெடுப்பதில் நாம் முன்னிற்போமெனவும் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் ஆளுந்தரப்புக்குள் பிளவுகள் ஏற்பட்டதனால் அந்த கருமங்களை நிறைவேற்ற முடியாது போனதாக தெரிவித்துள்ள சம்பந்தன், எனினும் முன்னேற்றகரமான பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன என குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் பலமாக பாராளுமன்றம் செல்ல முடியுமானால் எம்மால் தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் தெரிவித்துள்ளார்.