தற்கொலைக்கு முயன்ற நடிகை விஜயலட்சுமி வீடு திரும்பினார். தனக்கு சிகிச்சை முடியாமலேயே வலுக்கட்டாயமாக அனுப்பி வைப்பதாக அவர் புகார் கூறினார்.
நடிகர்கள் விஜய்-சூர்யா இணைந்து நடித்த ‘பிரண்ட்ஸ்’ உள்பட பல்வேறு படங்களில் நடித்து உள்ள நடிகை விஜயலட்சுமி, கடந்த 2 நாட்களுக்கு முன்பு, தான் வசிக்கும் சென்னை திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள குடியிருப்பில் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
உடனடியாக அவரை மீட்டு அடையாறில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரிடம் மாஜிஸ்திரேட்டு வாக்குமூலம் பெற்றார். பின்னர் அங்கிருந்து அவர், போரூரில் உள்ள மற்றொரு தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் சிகிச்சை முடிந்து நேற்று மாலை நடிகை விஜயலட்சுமி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்த அவர், திடீரென தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
பின்னர் அங்கிருந்த நிருபர்களிடம் நடிகை விஜயலட்சுமி கூறியதாவது:-
அடையாறில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து போரூரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டேன். எனது தோழியான நடிகை காயத்ரி ரகுராம்தான் இங்கு கொண்டு வந்து சேர்த்தார். காலை முதல் நான் ஏதும் சாப்பிடவில்லை. ஒரு வீடியோவை பதிவிட்டிருந்தேன்.
இதற்கிடையில் மாலையில் திடீரென என்னை ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்வதாக தெரிவித்தனர். ஆஸ்பத்திரியில் எனது சிகிச்சைக்கான பணத்தை காயத்ரி ரகுராம்தான் கட்டி உள்ளார். எனது அனுமதி இல்லாமல் எதற்காக என்னை உடனடியாக டிஸ்சார்ஜ் செய்கிறார்கள் என்று கூறவில்லை. எனக்கு சிகிச்சை முடியாமலேயே வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்து விட்டனர்.
எந்த கட்சியும் என்னுடன் இல்லை. மக்கள்தான் என்னுடன் இருக்கிறார்கள். நான் இப்படியே சென்று உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அங்கிருந்த போலீசார், அவரை வீட்டுக்கு செல்லும்படி அறிவுறுத்தினர். இதையடுத்து விஜயலட்சுமியை அவரது குடும்பத்தினர் காரில் ஏற்றி வீட்டுக்கு அழைத்துச்சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.