‘மக்கள் செல்வி’ பட்டத்துக்காக கீர்த்தி சுரேசுடன் மோதலா என்பது குறித்து வரலட்சுமி சரத்குமார் விளக்கமளித்துள்ளார்.
நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்து அடுத்து வெளிவர இருக்கும் படம், ‘டேனி’ இந்த படம் தொடர்பாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், ‘மக்கள் செல்வி’ என்ற பட்டத்துக்காக நடிகை கீர்த்தி சுரேசுக்கும், உங்களுக்கும் மோதல் இருப்பதாக பேசப்படுகிறதே?” என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்து வரலட்சுமி சரத்குமார் கூறியதாவது:-
“மக்கள் செல்வி” என்று கீர்த்தி சுரேசை அழைத்து வருவதாக சொன்னார்கள். இதுபற்றி விசாரித்தபோது, யாருமே யாருக்கும் அந்த பட்டத்தை கொடுக்கவில்லை என்று தெரிந்து கொண்டேன். எனக்கு சமூக சேவையில் ஈடுபாடு இருப்பதால், அந்த பட்டத்தை பல்வேறு அமைப்பினர் இணைந்து கொடுத்தார்கள். நான் ஏற்றுக்கொண்டேன். மற்றபடி கீர்த்தி சுரேசுக்கும், எனக்கும் மோதல் இல்லை.
இவ்வாறு வரலட்சுமி சரத்குமார் கூறினார்.
அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு வரலட்சுமி சரத்குமார் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி: சமூக சேவையில் ஈடுபடுகிறீர்கள். பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறீர்கள். அந்த வகையில் அரசியலில் ஈடுபடுவீர்களா?
பதில்: இன்னும் சில ஆண்டுகள் கழித்து நான் அரசியலுக்கு வருவேன். அப்பாவின் கட்சியிலோ, வேறு எந்த ஒரு கட்சியிலோ இணைய வாய்ப்பில்லை. அரசியலுக்கு வந்து எந்த பயமும் இல்லாமல், மக்களுக்காக குரல் கொடுப்பேன்.
கேள்வி: பெரும்பாலும் வில்லி வேடங்களிலேயே நடிக்கிறீர்களே…?
பதில்: கதாநாயகி, வில்லி என நான் வேறுபாடு பார்ப்பதில்லை. கதையின் நாயகியாக இருக்க விரும்புகிறேன்.
கேள்வி: ‘டேனி’ படத்தில் என்ன சிறப்பு அம்சம்?
பதில்: அதில் ஒரு நாய்க்குட்டியுடன் நடித்தது, வித்தியாசமான அனுபவம். பி.ஜி.முத்தையா தயாரித்துள்ள இந்த படத்தை சந்தானமூர்த்தி டைரக்டு செய்து இருக்கிறார். தஞ்சை அருகே உள்ள ஒரு காவல் நிலையத்தை மையப்படுத்தி கதை அமைக்கப்பட்டுள்ளது. இதில், துப்பறியும் போலீஸ் அதிகாரியாக நான் நடித்து இருக்கிறேன்.
மேற்கண்டவாறு வரலட்சுமி சரத்குமார் பதில் அளித்தார்.