டி.வி. படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது.
கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா, மராட்டியம் உள்ளிட்ட சில மாநிலங்களில் ஊரடங்கை தளர்த்தி தொலைக்காட்சி படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் தெலுங்கு டி.வி படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகை நவ்யா சாமிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. பின்னர் அவருடன் நடித்த நடிகர் ரவிகிருஷ்ணாவுக்கும் தொற்று உறுதியானது.
இந்த நிலையில் இந்தியில் ஒளிபரப்பாகி வரும் பாஹர்வாடி நகைச்சுவை படப்பிடிப்பில் பங்கேற்ற ஒருவர் கொரோனா தொற்றில் பலியாகி உள்ளார். இந்த படப்பிடிப்பில் பங்கேற்ற மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
பாஹர்வாடி இந்தி தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு உள்ளது. இதில் போஜானி, பரேஸ் கனட்ரா, ஸ்மிதா சர்வாதே, பக்தி ரத்தோட் உள்பட பலர் நடிக்கின்றனர். பாஹர்வாடி படப்பிடிப்பில் கொரோனா பரவியது குறித்து தயாரிப்பாளர் ஜேடி மஜிதியா கூறும்போது, “படப்பிடிப்பில் பங்கேற்ற டெய்லர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இதையடுத்து படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டதில் 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது” என்றார். அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் விவரம் வெளியிடப்படவில்லை. இது சின்னத்திரை நடிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.