மாறி வரும் சூழலில் உயர் கல்வியில் அடுத்த தலைமுறைக்கான கல்வி முறையைக் கட்டமைப்பது குறித்து 2021 பிப்ரவரியில், ஜெனீவாவில் உள்ள ஐநா மன்றத்தில் கருத்தரங்கம் நடக்கிறது. உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பால் ஏற்பாடு செய்யப்படும் இந்த கருத்தரங்கில் உலக அளவிலான துணை வேந்தர்கள் மற்றும் ஆய்வு மாணவர்கள் 250 பேர் தங்களது ஆய்வறிக்கைகளை சமர்ப்பித்துப் பேசவிருக்கிறார்கள்.
இது தொடர்பாக, தமிழக துணை வேந்தர்கள், மற்றும் பன்னாட்டு கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொள்ளும் காணொலி வழி ஆலோசனைக் கூட்டங்களை வாரா வாரம் சனிக்கிழமை தோறும் நடத்தி வருகிறது உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு.
அதன்படி முதலாவது ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசுப் பல்கலைக் கழக துணைவேந்தர்கள் மற்றும் பன்னாட்டு கல்வியாளர்கள் தங்களது ஆலோசனைகள் வழங்கினார்கள்.
கடந்த வாரம் நடந்த இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தலைமையேற்க நடந்தது. நேற்று மாலை நடந்த மூன்றாவது ஆலோசனைக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசனும் கலந்து கொண்டு கருத்துரை தந்தார்.
முன்னதாக இந்தக் கூட்டத்தில் பேசிய உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் ஊடகப் பிரிவு பொறுப்பாளர் ஜான் தன்ராஜ்,
“உலகத்தையே மாற்றும் ஒரே கருவி கல்விதான். காலத்திற்கேற்ப கல்வியில் ஏற்படும் மாற்றங்களை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்” என்று பேசினார்.
கனடா நாட்டு ஒண்டாரியோ மாகாண மேயர் பிராங்க் ஸ்கார்பிட்டி பேசுகையில், “இனிவரும் காலங்களில் தகவல் தொடர்புத் துறையானது அனைத்துத் துறைகளிலும் மிக முக்கியத்துவம் பெரும் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். அதேபோல் இணைய வழிக் கல்வி முறையும் புதிய தொழில்நுட்பங்களால் புதிய பரிமாணங்களை எட்டும்” என்றார்.
ஹார்வர்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர் ஜெரால்ட் எல். ஃபைன்ஸ்டீன், “இணைய வழிக் கல்வி முறையில் இருக்கும் சவால்களை வென்று புதிய கல்வி முறைக்கு நம்மை தகவமைத்துக் கொள்ள வேண்டும் . அதேநேரம் இணைய வழிக் கல்வி முறைக்கு புதிய பாதுகாப்புகளும் தேவைப்படுகிறது. எனவே, இணைய வழிக் கல்வியில் ஆராய்ச்சி மாணவர்களை மிக அதிக அளவில் ஊக்கப்படுத்த வேண்டும்” என்று பேசினார்.
கானா நாட்டு மன்னர் ராயல் ஹைனஸ் நானா நெட்போவா, தற்போது உலக அளவில் கல்வியில் ஏற்பட்டிருக்கும் புதிய தாக்கம் பற்றியும் கல்வியில் காலத்தின் தேவைக்கேற்ப செய்ய வேண்டிய புதிய மாற்றங்கள் பற்றியும் பேசினார்.
நிறைவாக, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆலோசனை தந்தபோது,
“கல்வி என்பது வெறும் மதிப்பெண் சார்ந்தது மட்டுமல்ல… அது அறிவை வளர்ப்பதாகவும் இருக்க வேண்டும். அறிவே பிரதானம் அதை வளர்ப்பதற்கு, மாணவர்களுக்கு அறிவைப் போதிக்கும் ஆசிரியர்கள் புதிய மாற்றத்திற்கு ஏற்ப தொழில்நுட்ப அறிவைப் பெற்றவர்களாக இருக்க வேண்டும். திரைத் துறையில் எனக்குக் கிடைத்த ஆசான்கள் மிகவும் திறமைசாலிகள் குறிப்பாக, பாலச்சந்தர் மற்றும் அனந்த் போன்றவர்கள்.
நாங்கள் 20 வருடங்கள் கஷ்டப்பட்டு பெற்ற கல்வியை இப்போது இரண்டே வருடங்களில் மாணவர்கள் பெற்றுவிடுகிறார்கள். அந்த அளவிற்கு கல்வியில் நவீன தொழில் நுட்பம் வளர்ந்து விட்டது. குறிப்பாக, ஊடகத் துறை சார்ந்த கல்வியில் புதிய தொழில்நுட்பங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. வகுப்பறையில் மாணவர்களை கேள்விகள் கேட்க அனுமதிக்க வேண்டும். மாணவர்களும் ஆசிரியர்களும் அதிகம் கலந்துரையாட வேண்டும் அதுவே சரியான கல்வியைக் கற்கும் சிறந்த வழியாக இருக்கும்.
இந்த உலகத்தை மாற்றுவதற்கு புதிய படைப்பாற்றல் திறன்மிக்க மாணவர்களை நாம் உருவாக்கவேண்டும். மாணவர்கள் சூரியனைப் போன்று பிரகாசிக்க, தங்களுக்குள் ஒரு நெருப்பை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதன் மூலம் தங்களின் லட்சியத்தை அடைய உழைக்க வேண்டும்.
இன்றைக்கு இணையவழிக் கல்வி முறை வேகமாக வளர்ந்து வந்தாலும் அது மாணவர்களுடைய தனித் திறன்களை வளர்ப்பதற்கு எந்த அளவுக்குப் பயன்படும் என்பது நமக்குத் தெரியாது. ஆசிரியர்கள் மாணவர் களோடு நேரடியாக கலந்துரையாடும் அனுபவத்தை இணைய வழிக் கல்வியால் எப்படி கொடுக்க முடியும் என்றும் தெரியவில்லை. இணையத்தின் வழியே மாணவர்கள் அறிவை பெற்றுக் கொள்ளலாம் ஆசிரியரிடமிருந்து நேரடி அனுபவத்தை பெற முடியுமா என்பதும் கேள்விக்குறி.
இருக்கும் இடத்திற்கே கல்வி வந்துவிடுவதால் மாணவர்களுக்கு வேறு எந்தவிதமான பயிற்சிகளும் இல்லாத நிலையை பள்ளிக்கூட இணைய வழிக் கல்வி உண்டாக்கலாம். இதையெல்லாம் புதிய தொழில்நுட்பங்களால் மாற்ற வேண்டும். அத்துடன் நேரடிக் கல்வி முறையிலும் விரைவில் நல்ல மாற்றம் வரும் என்று நாம் நம்புகிறோம்” என்றார்.
உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவர் திரு ஜெ.செல்வகுமார் தொகுத்தளித்த இந்த இணைய வழிக் கூடலில் கானா நாட்டின் டோரொண்டோ சட்டமன்ற உறுப்பினர் (எம்.பி.பி ) லோகன் கணபதி, அலையன்ஸ் கிரியேட்டிவ் கம்யூனிட்டி ப்ராஜக்ட் தலைவர் ஜான் நானா யா ஒக்கியாரே உள்ளிட்டோரும் கலந்து கொண்டு ஆலோனைகளை வழங்கினார்கள்.
அடுத்த ஆலோசனைக் கூட்டம் ஆகஸ்ட் 14-ம் தேதி கூடுகிறது.