தனது தந்தையின் பின்னர் இந்நாட்டில் பொது மக்கள் சகாப்தம் ஒன்றினை தான் ஏற்படுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தனக்கு எதிராக எவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டாலும் ´உண்மை ஒருநாள் வெல்லும்´ என அவர் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று (01) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.
—–
கட்சி ஐக்கிய தேசியக் கட்சி மாத்திரமே மக்கள் நம்பிக்கையை காப்பாற்றக் கூடிய ஒரே கட்சி என அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மீகொட பொருளாதார மத்திய நிலையத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் எனவும் வாக்களிக்காமல் விடுவது கொடுர பாவம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
—–
ஆகஸ்ட் 05 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் 225 பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிலிருந்து 03 ஆயிரத்து 682 பேரும், சுயேச்சைக் குழுக்களின் சார்பில் 03 ஆயிரத்து 800 பேருமாக மொத்தம் 07 ஆயிரத்து 452 பேர் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஒரு கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 874 பேர் வாக்களிப்பதற்கு தகுதிப்பெற்றுள்ளனர். பொதுத் தேர்தலுக்கான 12 ஆயிரத்து 985 வாக்களிப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன் நாடு முழுவதும் 71 வாக்கெண்ணும் மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டு 05 மாதங்களின் பின்னர் பொதுத் தேர்தல் நடைபெறுவது இலங்கை வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த தருணமாக மாறியுள்ளன. வழமையாக பாராளுமன்றம் கலைக்கப்பட்டு 10 முதல் 14 நாட்களுக்குள் வேட்புமனுக்கள் கோரப்பட வேண்டும் என்பதுடன், வேட்புமனுக்கள் கோரப்பட்டு ஐந்து முதல் ஏழு வாரங்களுக்குள் பொதுத் தேர்தல் நடைபெற வேண்டும். என்றாலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கடந்த மார்ச் முதலாம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்டிருந்த போதிலும் திடீரென நாட்டில் கொரோனா வைரஸ் பரவலுக்கு கொடுக்க நேரிட்டதால் ஐந்து மாதங்களின் பின்னரே பொதுத் தேர்தல் நடைபெறுகிறது.
இலங்கையின் தலைவிதியை தீர்மானிக்கப்போகின்ற நாளாக ஆகஸ்ட்05 ஆம் திகதி மாறியுள்ளது. அன்றைய தினம் வாக்களிப்பு முடிவடைந்ததும் மறுநாள் 06 ஆம் திகதி காலை 8 மணி முதலே வாக்கெண்ணும் பணி ஆரம்பமாகும். மதலாவது தேர்தல் முடிவு மாலை 06.00 மணியளவில் அறிவிக்க முடியுமென தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அன்று நள்ளிரவுக்குள் ஆளப்போவது யாரென்பது தெரியவரும். வேட்பாளர்கள் பெற்றுக்கொள்ளும் விருப்பு வாக்குகள் 07ஆம் திகதியே வெளியிடப்படவுள்ளன.
அடுத்தவார இறுதியில் புதிய அமைச்சரவையும் பதவியேற்கும் எனத் தெரியவருவதுடன், தேர்தல் ஆணைக்குழுவின் வர்த்தமானி வெளியானதும் 20ஆம் திகதிக்கு முன்னர்0 9ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வுக்கான அதிவிசேட வர்த்தமானியையும் ஜனாதிபதி வெளியிடவாரெனவும் அறிய முடிகிறது. கபே, பெப்ரல் உட்பட பல உள்நாட்டு, சர்வதேச கண்காணிப்பு அமைப்புகளிலும் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன. பொதுத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவுக்குவரும் நிலையில், பிரதான அரசியல் கட்சிகள் யாவும் இன்று இறுதிக்கட்ட பரப்புரைகளில் தீவிரமாக ஈடுபடவுள்ளன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியின்கீழ் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பொதுஜன பெரமுனவின் ஸ்தாபர் பஸில் ராஜபக்ஷ ஆகியோர் மும்முனைகளில் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். ஜனாதிபதி தேர்தலின்போது கோட்டாபய ராஜபக்ஷ தரப்பு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தைகோரி பரப்புரையை முன்னெடுத்துவருகின்றது. பொதுஜன பெரமுனவின் இன்றைய பிரதான இறுதி பிரசாரக் கூட்டங்கள் அம்பாந்தோட்டை மற்றும் கொழும்பை மையப்படுத்தி நடைபெறவுள்ளன.
மறுபுறத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான அணியும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றது. வடக்கு, கிழக்கு, மலையக, தென் பகுதியென அனைத்து பிரதேசங்களிலும் சஜித் பிரேமதாச பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொண்டதுடன், இன்று கொழும்பில் இறுதி பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொள்ளவுள்ளார். அதேபோன்று ஐக்கிய தேசியக் கட்சியின் இறுதி பிரசாரக் கூட்டமும் அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் மத்திய கொழும்பில் நடைபெறவுள்ளது.
அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தேசிய மக்கள் சக்தி, தமிழ் முற்போக்குக் கூட்டணி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட இதர கட்சிகளும் வெற்றி இலக்கை அடைவதற்காக இறுதிக்கட்ட பிரசாரத்தில் இன்று ஈடுபடவுள்ளன. கடந்த காலங்களைபோல் இன்றைய இறுதிநாளன்று பிரமாண்ட கூட்டங்கள் நடைபெறாது. சுகாதார அமைச்சின் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பான முறையில் கூட்டங்களை நடத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதால் பிரமாண்டமில்லாத கூட்டங்களுக்கே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனமை குறிப்பிடத்தக்கது.
சுப்பிரமணியம் நிஷாந்தன்