பாரதிராஜாவை தலைவராக கொண்டு தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற புதிய சங்கம் தொடங்க ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் இந்த சங்கத்தை தொடங்கி வைக்கும்படி முதல் அமைச்சருக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் தகவல் வெளியானது. இதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. புதிய சங்கத்தை தொடங்கி வைக்க கூடாது என்று முதல்- அமைச்சருக்கும் மனு அனுப்பினர். இதுகுறித்து விளக்கம் அளித்து பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“தயாரிப்பாளர்கள் சங்கம் பல்வேறு நபர்களால் பல்வேறு காரணங்களால் செயலற்ற தன்மையில் இருப்பதை நாம் அனைவரும் அறிவோம். தமிழ் திரைப்படங்கள் எந்த வித பிரச்சினையுமின்றி தியேட்டரில் வெளிவர தயாரிப்பாளர்கள் நலன் காக்க சங்கம் சரியான பாதையில் பயணிக்க சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பது பலரது கோரிக்கை. அதற்கு சுயநலமற்ற நிர்வாகிகளை நாம் இனம் கண்டு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இது காலத்தின் கட்டாயம். அதற்கு நமது சங்கத்தில் இருக்கும் அனைத்து உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்த பிறகே சில முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. நிர்வாகிகள் பட்டியல் பற்றி வெளியான செய்தியில் உண்மை இல்லை. அனைத்து நடப்பு தயாரிப்பாளர்கள் கருத்து கேட்ட பிறகு முடிவு எடுக்கப்படும்”. இவ்வாறு கூறியுள்ளார்.