‘மாஸ்டர்’ படத்தைத் தொடர்ந்து, ராஜ்கமல் நிறுவனத்தின் படத்தை முடித்துவிட்டு தெலுங்குத் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாஸ்டர்’. இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் அனைத்தும் முடிந்து, வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. கரோனா அச்சுறுத்தல் முடிந்து திரையரங்குகள் திறந்தவுடன் ‘மாஸ்டர்’ வெளியாகவுள்ளது.
இப்படத்துக்குப் பிறகு ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். இது தொடர்பான அறிவிப்பை சூசகமாக ஜீ தமிழ் விருது விழாவில் தெரிவித்தார் கமல். இந்தப் படம் ராஜ்கமல் நிறுவனத்தின் 50-வது தயாரிப்பாக இருக்கவுள்ளதாகவும், இதில் ரஜினி நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், கரோனா அச்சுறுத்தலால் இதில் மாற்றம் இருக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
ராஜ்கமல் நிறுவனத்தின் படத்தை முடித்துவிட்டு, தெலுங்குத் திரையுலகின் முன்னணித் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்தப் படத்தில் முன்னணி நடிகர் ஒருவர் நடிக்கவுள்ளதாகவும், அனைத்து மொழிகளிலும் உருவாகும் பிரம்மாண்டத் தயாரிப்பாகவும் இருக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
‘ஸ்ரீமந்துடு’, ‘ஜனதா கரேஜ்’, ‘ரங்கஸ்தலம்’, ‘டியர் கம்ரேட்’, ‘கேங் லீடர்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ள நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ். தற்போது அல்லு அர்ஜுன் – சுகுமார் இணையும் ‘புஷ்பா’ படத்தையும் தயாரித்து வருகிறது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.