சவுதி முன்னாள் உளவுத்துறை அதிகாரியைக் கொல்ல கனடாவுக்கு கூலிப்படையை அனுப்பியதாக சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புகார் மனு ஒன்றில் சவுதி பட்டத்து இளவரசர் சவுதி முன்னாள் உளவுத்துறை அதிகாரியான சாத் அல்-ஜாப்ரியை கொலை செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
துருக்கியில் பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை செய்யப்பட்ட உடனேயே ஜாப்ரியைக் கொல்ல திட்டமிடப்பட்டதாகவும், எனினும் அந்த திட்டம் தோல்வியில் முடிந்ததாக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சவுதி அரேபியா அரசாங்கத்தின் மூத்த அதிகாரியான ஜாப்ரி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நாடுகடத்தப்பட்டார். அவர் அன்று முதல் கனடாவின் டொரான்டோவில் தனியார் பாதுகாப்பில் இருக்கிறார்.
டொரொன்டோவின் பியர்சன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து கூலிப்படையினர் நாட்டிற்குள் நுழைய முயன்றபோது கனாடா எல்லைப்படையினருக்கு சந்தேகம் எழுந்ததையடுத்து, ஜாப்ரியை கொல்லும் சதி திட்டம் முறியடிக்கப்பட்டது என்று நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன.
61 வயதான ஜாப்ரி, பல ஆண்டுகளாக இங்கிலாந்தின் எம்ஐ6 மற்றும் சவுதி அரேபியாவில் உள்ள பிற மேற்கத்திய உளவு நிறுவனங்களுக்கான முக்கிய அங்கமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.ஊழல் குற்றச்சாட்டு மற்றும் தனிப்பட்ட கூலிப்படையினரின் குழுவை மேற்பார்வையிடுவது போன்ற சவுதி சம்பந்தமான முக்கிய தகவல்கள் தனக்கு தெரியும் என்பதால் தன்னை கொல்ல முயற்சிப்பதாக ஜாப்ரி கூறியுள்ளார்.
2018ல் இஸ்தான்புல்லில் உள்ள சவுதி துணைத் தூதரகத்திற்குள் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் கசோகி கொலையில் புலி படைக்கு தொடர்பு இருந்ததாக நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.