ஓடிடி தளங்களின் வருகை இரு முனை கத்தி போல என்று இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
சார்ஸ் இயக்கத்தில் வைபவ், வெங்கட்பிரபு, வாணி போஜன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘லாக்கப்’. நிதின் சத்யா தயாரித்துள்ள இந்தப் படம் திரையரங்க வெளியீடாகவே இருந்தது. ஆனால், கரோனா அச்சுறுத்தலால் தற்போது ஜீ 5 ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவுள்ளது.
இதனால் ‘லாக்கப்’ படத்தை விளம்பரப்படுத்த ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்துள்ளார் வெங்கட்பிரபு. அதில் ஓடிடி தளங்களில் வருகை, அதில் படங்கள் வெளியீடு குறித்த கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாக வெங்கட் பிரபு கூறியிருப்பதாவது:
“ஓடிடி தளங்களின் வருகையில் நல்லதும் இருக்கிறது, கெட்டதும் இருக்கிறது, அது இரு முனை கத்தி போல. ‘லாக்கப்’ போன்ற சிறிய பட்ஜெட் படங்களுக்கு ஓடிடி தளங்கள் உதவிகரமாக இருந்தாலும், இன்னொரு பக்கம் ஓடிடி தளங்கள் தயாரிப்பாளர்களுக்குத் தரும் வருவாய் சதவீதம் என்பது குறைந்துள்ளது.
அதே போல் ஒருவர் படத்தை வாங்கத் தயாராக இருக்கிறார் எனும்போது அது தயாரிப்பாளரை அவரது கடனிலிருந்து மீட்கிறது. அந்த பரிவர்த்தனையிலிருந்து அவருக்கு லாபம் கிடைக்காது என்று முடிவு செய்தாலும். ஆனால் சில தளங்கள் வருவாய் பகிர்வு முறையைக் கட்டாயமாக்கிப் பல வருடங்கள் கொஞ்சம் கொஞ்சமாக பணம் கிடைக்கும்படியான திட்டத்தை முன்வைக்கின்றன. இதனால் அப்படியான தளங்களின் மூலம் உடனடியாக பணம் கிடைக்காது. இது ஓடிடி தளங்களுக்குப் படம் விற்பதில் இருக்கும் பல சிக்கல்களில் ஒரு சிக்கல்”
இவ்வாறு வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.