25 வருடங்களுக்கு பின்னர் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைப்பதவியில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளார்.
கட்சித் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் அவர் இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளார்.
புதிய தலைமைத்துவத்திற்காக நான்கு பேர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் புதன்கிழமை அது தொடர்பில் இறுதி தீர்மானம் அறிவிக்கப்படும் எனவும் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு மற்றும் கட்சியின் அதிகாரிகள் குழு இன்று முற்பகல் சிறிகொத்த கட்சித் தலைமையகத்தில் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூடியது.
இதன் போது, தான் கட்சியின தலைமைப் பதவியில் இருந்து விலகுவதாக ரணில் விக்கிரமசிங்க அறிவித்தார்.
எதிர்வரும் புதன்கிழமை புதிய தலைவர் நியமிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தலைமைப்பதவியை பொறுப் பேற்க தயாராக உள்ளவர்கள் இருந்தால் பெயர்களை அறிவிக்குமாறு ரணில் விக்கிரமசிங்க இன்றைய கலந்துரையாடலில் கலந்து கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதன்போது கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம், உப தலைவர் ரவி கருணாநாயக்க, வஜிர அபேவர்தன மற்றும் தயா கமகே ஆகியவர்கள் தலைவர் பதவிக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஒருவர் எதிர்வரும் புதன்கிழமை கட்சியின் தலைவராக நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.