அமெரிக்க துணை ஜனாதிபதிக்கு போட்டியிடும் கமலா ஹாரிசுக்கு நடிகை பிரியங்கா சோப்ரா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் நிற்கிறார். இந்த கட்சி சார்பில் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட கமலா ஹாரிஸ் வேட்பாளராக தேர்வாகி உள்ளார். கமலா ஹாரிஸ் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர். இவரது தாய் தமிழ்நாட்டை சேர்ந்தவர். இதனால் அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் அனைவரும் கமலா ஹாரிசுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் பாப் பாடகர் நிக் ஜோனஸை மணந்து அமெரிக்காவில் வசிக்கும் பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவும் கமலா ஹாரிசுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “இது அனைத்து தெற்காசிய பெண்களுக்கும் சரித்திரம் முக்கியத்துவம் வாழ்ந்த திருப்புமுனையான பெருமை மிகுந்த தருணம். அமெரிக்க துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட தேர்வாகி உள்ள இந்தியாவை பூர்வீகமாக கொண்ட முதல் கறுப்பின பெண்ணான கமலா ஹாரிசுக்கு எனது வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.