எஸ்.பி பால சுப்பிரமணியம் விரைவில் குணம் அடைய வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இந்திய மொழிகள் அனைத்திலும் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை நிகழ்த்திய பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கடந்த 5-ந் தேதி கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள எம்.ஜி.எம். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். லேசான கொரோனா தொற்று உள்ளது என்றும், இரு தினங்களில் குணமடைந்து வீடு திரும்பி விடுவேன் என்றும் அவரே வீடியோவில் நம்பிக்கை தெரிவித்து இருந்தார்.
ஆனால் கடந்த 13-ந் தேதி உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டு மருத்துவ குழுவின் ஆலோசனையின்படி தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். செயற்கை சுவாசக்கருவிகள் பொருத்தப்பட்டன. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றும், மருத்துவ குழுவின் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார் என்றும் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை சீரான நிலையில் உள்ளது என்றும், அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து மருத்துவ குழு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறது என்றும் மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டது. எஸ்.பி பாலசுப்பிரமணியம் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக அவரது மகன் எஸ்.பி.பி சரண் தெரிவித்துள்ளார்.