9 ஆவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இன்றைய பாராளுமன்றத்தின் முதல் அமர்வின் ஆரம்பத்தில் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் பெயரை அமைச்சர் தினேஷ் குணவர்தன முன்மொழிந்தார்.
இதனை பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார வழிமொழிந்தார்.
இதனால் புதிய சபாநாயகர் வாக்கெடுப்பு இன்றி தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
—-
9 ஆவது பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவரது பெயரை பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லங்சா வழிமொழிந்தார்.
இதனால் பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய வாக்கெடுப்பு இன்றி தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அங்ஜன் இராமநாதன் குழுக்களின் பிரதி தவிசாளராகவும் வாக்கெடுப்பு இன்றி தெரிவு செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தின் எதிர்க் கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச, சபாநாயகரால் அறிவிக்கப்பட்டார்.
—–
இம்முறை பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 145 ஆசனங்களைப் பெற்று பெரும்பான்மையை பலத்தை பெற்றுக் கொண்டுள்ளது.
அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி 54 ஆசனங்களையும் இலங்கை தமிழரசுக் கட்சி 10 ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி 3 ஆசனங்களையும் பெற்றுக்கொண்டுள்ளது.
மேலும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 2 ஆசனங்களையும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 2 ஆசனங்களையும் பெற்றுக்கொண்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, அபே ஜனபல கட்சி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், முஸ்லிம் தேசியக் கூட்டணி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இம்முறை பாராளுமன்றத்தில் தலா 1 ஆசனத்தையும் பெற்றுள்ளன.
எவ்வாறாயினும் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் அபே ஜனபல கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர்கள் இதுவரையில் தெரிவு செய்யப்படவில்லை என்பதனால் அவர்களின் ஆசனங்கள் வெற்றிடமாகவே காணப்படுகின்றன.
இந்நாட்டின் பழமை வாய்ந்த மற்றும் பிரதானமான அரசியல் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் பாராளுமன்ற கன்னி அமர்வில் கலந்து கொள்ளாத முதல் சந்தர்ப்பம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
—–
பாராளுமன்றுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களில் பெரும்பாலவர்கள் 50வயதுக்கு குறைந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
இம்முறை தெரிவு செய்யப்பட்டவர்களில் 50வயதுக்கு குறைந்தவர்கள் 87பேர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பாராளுமன்றுக்கு தெரிவு செய்யப்பட்டள்ளவர்களின் தகவல் தற்பொது பாராளுமன்ற அதிகாரிகள் மூலம் Online முறைமையில் பெறப்பட்ட நிலையில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய 30வயதுக்கு குறைந்தவர்கள் 5பேரும், 30 – 40வயதுக்கு உட்பட்டவர்கள் 21பேரும், 40-50வயதுக்கு உட்பட்டவர்கள் 60பேரும், 50-60வயதுக்கு உட்பட்டவர்கள் 54பேரும், 60-70வயதுக்கு உட்பட்டவர்கள் 37பேரும், 70-80வயதுக்கு உட்பட்டவர்கள் 9பேரும் 80-90வயதுக்கு உட்பட்டவர்கள் 3பேரும் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பாராளுமன்றுக்கு புதிய உறுப்பினர்கள் 7 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
——
பிரதமர் மஹிந்த ராஜபக்ச எடுக்கின்ற ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு எமது ஆதரவு தொடர்ந்து இருக்கும் என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகின்றோம். ஒருமித்து இந்தக் கருமத்தை நிறைவேற்றக்கூடிய வகையில் அனைவரும் செயற்பட வேண்டும் என்று நாம் விரும்புகின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
எனவே, பிரதமர் மஹிந்த ராஜபக்ச வழங்கியுள்ள வாக்குறுதியையும், அவர் மீது நாம் வைத்துள்ள நம்பிக்கையையும் அவர் வீணடிக்கக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசே தமிழ் மக்களுக்குத் தீர்வு வழங்கியது என்ற வரலாற்றுப் பதிவை இந்த ஆட்சியில் நாம் ஏற்படுத்துவோம் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தமை தொடர்பில் சம்பந்தனிடம் கேட்டபோதே மேற்கண்டவாறு பதிலளித்தார்.