பயங்கரவாதத்தை போன்ற இனவாதத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்

சகல இனத்தினரும் சுதந்திரமாக வாழக்கூடிய அரசியலமைப்பொன்றை உருவாக்க வேண்டுமென தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் எம்.பி. தெரிவித்தார்.

புதிய சபாநாயகருக்கு வாழ்த்துத் தெரிவித்து நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினரான நீங்கள் சபாநாயகராக தெரிவானதை வரவேற்கிறோம்.சிரேஷ்ட எம்.பியான பிரதமர் மஹிந்த ராஷபக்ஷ,முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போன்றவர்கள் தெரிவான இந்த பாராளுமன்றத்தில் ஐ.தே.க தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவாகவில்லை.

நாட்டுக்கு புதிய அரசியலமைப்பு அவசியமானது. சகல கட்சிகளின் வாயிலாகவும் மக்கள் இந்த எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ளனர். பயங்கரவாதத்தை ஒழித்தது போன்று இனவாதத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.பலமான அரசாங்கம் உருவாகியுள்ளது.பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றி உகந்த அரசியலமைப்பொன்றை உருவாக்க வேண்டும்.சகல இனத்தினரும் சுதந்திரமாக வாழக்கூடிய அரசியலமைப்பொன்றை எந்த வெளிநாட்டு தலையீடுமின்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும்.

——-

ஐந்து ராஜபக்‌ஷக்களுக்கும் இணைந்து பிரச்சினைகளை கையிலெடுத்து அதற்கான தீர்வைப் பெற்றுக்கொள்ளும் தார்மீக கடமை காணப்படுவதாக தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அவர் நேற்று (20) எழுதியுள்ள கடிதத்திலேயே இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக் கடித்ததில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“நீங்கள் பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்டதற்கு எனது உளங்கனிந்த வாழ்த்துகள்.

இப்பதவி தங்களுக்கு புதிதல்ல என்பதையும் அனைவரும் அறிவோம்.

2007ஆம் ஆண்டு மாசி மாதம் 04ஆம் திகதி காலி முகத்திடலில் 59ஆவது சுதந்திரதின விழாவில் நீங்கள், என்னையும் டக்ளஸ் தேவானந்தாவையும் குறிப்பிட்டு ஆற்றிய உரையின் பகுதியை தங்களுக்கு ஞாபகமூட்டுவதற்காக இங்கே தந்துள்ளேன். ‘தமிழ், இஸ்லாமிய மக்களின் உயிர்களையும், சொத்துக்களையும் பாதுகாக்க வேண்டியது எமது கடமை. அத்துடன் அவர்களின் பிள்ளைகளின் எதிர்கால உலகத்தை வளம்பெற வைக்க வேண்டும், என்று மொறகஹாகந்த மகா சமுத்திர திட்டம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட போது நான் கூறியதை, மீண்டும் வற்புறுத்தி கூறுவது யாதெனில், பயங்கரவாதத்தை இல்லாமல் செய்வதற்கு மிகப்பொருத்தமான ஆயுதம் அப்பாவித் தமிழ் மக்களுக்கு நீதி வழங்குவதே.

அதற்கு தற்போது தென்னிலங்கை சிங்கள மக்கள் தயாராகிவிட்டார்கள். விடுதலைப் புலிகளின் வெறித்தனமான வேண்டுகோளிற்கு இடமளியோம். இருப்பினும் நாம் நியாயமாகவும் நேர்மையாகவும் நடப்பின் குறைந்தபட்சம் திருவாளர்கள் ஆனந்தசங்கரி, டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களுடன் இசைந்து செயற்பட வேண்டும்’ என கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts