பிரபல பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்று காரணமாக கடந்த 5-ம் தேதியில் இருந்து சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையில், கடந்த 13-ம் தேதியிலிருந்து அவரது உடல்நிலை மோசமடைந்தது.
நுரையீரல் தொற்று கடுமையாக தாக்கி நுரையீரல் செயலிழக்கும் நிலைக்கு சென்றதால் தொடர்ந்து 9 நாட்களாக செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ கருவிகளின் உதவியுடன் சிகிச்சைப் பெற்றுவருகிறார். அவருக்கு பலரும் தொடர்ந்து பிரார்த்தனை செய்துவருகின்றனர். இதற்கிடையில், பாடகி மாளவிகா தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட பின்னரும், எஸ்.பி.பி பங்கேற்ற தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்சி ஒன்றில் பங்கேற்றார்.
அவரால்தான் எஸ்.பி.பிக்கு கொரோனா பரவியது என்று கடந்த சில தினங்களாக சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவிவந்தன. இந்தவிவகாரம் குறித்து மாளவிகா விளக்கம் அளித்துள்ளார். அவருடைய பேஸ்புக் பதிவில், ’ஹேமசந்திரா, அனுதீப் உள்ளிட்ட பாடகர்கள் பங்கேற்ற எஸ்.பி.பியின் நிகழ்ச்சி ஜூலை 30-ம் தேதி மற்றும் எஸ்.பி.பியுடன் நான், காருண்யா, சத்யா யாமினி உள்ளிட்ட பெண் பாடகர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி ஜூலை 31-ம் தேதி படமாக்கப்பட்டது.
ஒருவேளை அப்போதே எனக்கு கொரோனா பாதிப்பு இருந்தால் என்னுடன் அறையில் இருந்த மூன்று பெண் பாடகர்கள் மற்றும் தொகுப்பாளருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கும். என்னுடைய சகோதரி ஒன்றும் பாடகி கிடையாது. அவர் அமெரிக்காவில் வசிக்கிறார். அவர் ஏன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கப் போகிறார்? ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதிலிருந்து என்னுடைய கணவர் வீட்டிலிருந்து பணி செய்துவருகிறார். கடந்த 5 மாதங்களுக்கு என்னுடைய வயதான பெற்றோர்கள் வீட்டிலேயே இருக்கின்றனர்.
கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த 5 மாதங்களாக வீட்டு வேலைக்கு கூட வேலையாட்கள் வைக்கவில்லை. எனக்கு 2 வயது குழந்தை உள்ளது. அதன்காரணமாக கடந்த 5 மாதங்களாக நான் எந்த நிகழ்ச்சிக்காகவும் வெளியே செல்லவில்லை. இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காகத்தான் நான் முதன்முதலாக வீட்டைவிட்டு வெளியே வந்தேன்.
ஆகஸ்ட் 5-ம் தேதி எஸ்.பி.பி மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்ற சிலருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட தகவலை அறிந்தேன்.அதனையடுத்து, நான் கொரோனா பாதிப்பு சோதனை மேற்கொண்டேன். அதற்கான சோதனை முடிவு ஆகஸ்ட் 8-ம் தேதிதான் வந்தது. எனக்கு, என்னுடைய பெற்றோருக்கு, என்னுடைய குழந்தைக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. என்னுடைய கணவருக்கு நெகடிவ். அதனையடுத்து, நாங்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோம். தயவுசெய்து தேவையில்லாத வதந்திகளைப் பரப்பவேண்டாம்’ என்று குறிப்பிட்டுள்ளார்