நல்லாட்சி அரசாங்கத்தில் உருவாக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் சுயாதீனமாக செயற்படவில்லை. அதை சுயாதீனமாக்குவது தொடர்பில் சில மாற்றங்களை எதிர்வரும் அரசியலமைப்பு திருத்தம் மூலம் மேற்கொள்வதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது என வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
ஆணைக்குழுவை நியமித்த அரசியலமைப்பு பேரவை அங்கத்தவர்கள் 10பேரில் 7பேர் நல்லாட்சி அரசாங்கத்தைச் சேர்ந்தவர்களென்றும் அதில் செயற்பட்ட மூன்று சிவில் செயற்பாட்டாளர்கள் தொடர்பில் சிக்கல்கள் நிலவுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இம்முறை பொதுத் தேர்தலில் தமது வெற்றிக்காக ஒத்துழைப்பு வழங்கிய மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கண்டி ஹரிஸ்பத்துவவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கருத்துத் தெரிவித்தபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். சுயாதீன ஆணைக்குழு எனக்குறிப்பிடப்படுகின்ற போதும் அடிப்படை விடயங்கள் கூட அதில் மீறப்பட்டுள்ளதாகவும் அதனால் அதனை நிவர்த்திசெய்ய வேண்டியது அவசியமென்றும் அவர் தெரிவித்தார்.
தகவலறியும் சட்டமூலம், ஜனாதிபதியின் பதவிக் காலத்தை ஐந்துவருட காலத்திற்கு மட்டுப்படுத்தல், இரண்டு தடவைகளுக்கு மேல் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது போன்ற காரணங்கள் 20வது அரசியலமைப்பில் உள்ளடக்கப்படுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
நாட்டு மக்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொடுத்துள்ளமை நாட்டுக்கு பொருத்தமான அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்காகவே என்றும் தெரிவித்தார்.
19வது அரசியலமைப்பு திருத்தம் நாட்டின் எதிர்கால பயணத்திற்கு பாரிய தடையாக அமையுமென்றும் அதன் விளைவுகளை கடந்த காலங்களில் கடுமையாக அனுபவிக்க நேர்ந்ததாகவும் அவர் தெரிவித்தார். 13வது அரசியலமைப்பு திருத்தம் ஒரு வார காலத்தில் தயாரிக்கப்பட்டுள்ள ஒரு திருத்தமாகும் என்பதால் அதில் குறைபாடுகள் இருக்க முடியுமென்றும் அது தொடர்பில் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படுமென்றும் அவர் தெரிவித்தார்.
விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் வெளியிடும் கூற்றுக்கள் இனவாதம் சார்ந்தவையென்றும் தேசிய ஒற்றுமைக்கு அது பெரும் பாதிப்பாக அமையுமென தாம் நினைப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.(ஸ)
லோரன்ஸ் செல்வநாயகம்