அப்பாவைப் பார்த்தேன், அவர் மீண்டும் நம்மிடம் வருவார் என்று எஸ்பிபியின் மகன் சரண் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இன்று நான் அப்பாவைப் பார்க்கச் சென்றேன். கடந்த இரண்டு வாரங்களாக அவரை என்னால் பார்க்க முடியவில்லை. அவர் விழிப்பாக இருந்தார். மருந்துகளால் அவர் சற்று மயக்க நிலையிலிருந்தார். முழுமையாக விழிப்புடன் இல்லையென்றாலும் மருந்துகளின் தாக்கம் சற்று அவருக்கு மயக்க நிலையைத் தருகிறது. அவர் என்னைப் பார்த்தார். அடையாளம் கண்டு கொண்டார். அவர் எப்படி உணர்கிறார் என்று நான் கேட்டேன். உங்கள் அனைவரது நல் வார்த்தைகள், ஆசீர்வாதங்களை அவருக்குச் சொன்னேன்.
அனைவரும் அவருக்காகப் பிரார்த்தனை செய்கிறார்கள், அவர் வலிமையாக இருந்து விரைவில் மீண்டு வர வேண்டும் என்று சொன்னேன். அவர் கட்டை விரலை உயர்த்திக் காட்டினார். நான் எப்படி இருக்கிறேன், அம்மா எப்படி இருக்கிறார் என சைகையில் கேட்டார். அவர் அறையில் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல்கள் அவருக்குக் கேட்கிறது. உங்கள் அனைத்து பிரார்த்தனைகளும், பிரசாதங்களும் தீவிர சிகிச்சைப் பிரிவுக் குழுவின் மூலமாக அவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அனைத்துக் கடவுள் படங்கள், பிரசாதங்கள் அவரது படுக்கைக்குப் பக்கத்தில், பின்னால் அழகாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அப்பாவைப் பார்த்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. அவருக்கும் என்னைப் பார்த்ததில் மகிழ்ச்சி என்றே நினைக்கிறேன். உங்கள் அனைவருக்கும் நன்றி.
இனி அவரை தினமும் நான் சென்று பார்த்து வருவேன். அது அவருக்கு நல்ல ஊக்கத்தைத் தரும் என நினைக்கிறேன். அவருக்காக உங்கள் அத்தனை பிரார்த்தனைகளுக்கும், வாழ்த்துகளுக்கும் உங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக அவர் நன்றி சொல்ல விரும்புவார் என உறுதியாக நினைக்கிறேன்.
நம் பிரார்த்தனைகளைத் தொடர்வோம். உங்கள் அனைவரின் அன்பு, அக்கறைக்கு எங்கள் குடும்பம் கடன் பட்டுள்ளது என்பதை மீண்டும் சொல்லிக் கொள்கிறேன். அப்பா நம்மிடம் மீண்டும் வருவார், உங்கள் அனைவரையும் விரைவில் என்பதில் எனக்கு நம்பிக்கை மட்டுமே உள்ளது. எம்ஜிஎம் ஹெல்த் கேர் தரப்புக்கு என்றும் நன்றியுடன் இருப்பேன். அப்பாவுக்கு உதவி வரும், அவர் விரைவில் குணமடைய உதவி செய்து வரும் மருத்துவக் குழுவுக்கு நன்றி. மீண்டும் உங்கள் அனைவருக்கும் நன்றி”
இவ்வாறு எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார்