பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விழிப்புடன், பேசுவதை புரிந்து கொள்ளும் நிலையில் இருக்கிறார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
புகழ்பெற்ற சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள எம்ஜிஎம் தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த 21 நாட்களாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ கருவிகள் மூலம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை குறித்து மருத்துவமனையின் உதவி இயக்குனர் டாக்டர் அனுராதா பாஸ்கரன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“கொரோனா தொற்றினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தொடர்ந்து செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ கருவிகள் உதவியுடன் அவசர சிகிச்சை பிரிவில் இருக்கிறார். அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது. அவர் விழிப்புடன் இருக்கிறார். பேசுவதை புரிந்து கொள்கிறார். அவரது உடல்நிலையை மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்”.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
எஸ்.பி.பாலசுப்பிரமனியம் மகன் எஸ்.பி.பி.சரண் நேற்று வெளியிட்டுள்ள வீடியோவில் பேசி இருப்பதாவது:
“நான் மருத்துவமனைக்கு சென்று அப்பாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ குழுவினரை சந்தித்தேன். இரு தினங்களுக்கு முன்பு அப்பாவை பார்க்கும்போது இருந்ததை விட இப்போது நன்றாக இருக்கிறார். நுரையீரல் செயல்பாட்டில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மயக்க நிலையில் இல்லாமல் பேசுவதை புரிந்து கொள்கிறார். நன்றாக உணர்கிறார். இது நோய்பாதிப்பில் இருந்து மீள்வதற்கான முதல்படி என்று மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
அப்பா படிப்படியாக நோயில் இருந்து மீண்டு வருகிறார். முன்பை விட அதிக விழிப்புடன் இருக்கிறார். ஏதோ எழுதி என்னிடம் தெரிவிக்க முயன்றார். ஆனால் பேனாவை அவரால் சரியாக பிடிக்க முடியவில்லை. இந்த வாரத்துக்குள் அவரால் பேனாவால் எழுதி என்னிடம் தகவல் தெரிவிக்க முடியும் என்று நம்புகிறேன். தினமும் நாளிதழ்களை படித்துக்காட்டும்படி மருத்துவர்களிடம் சொல்லி இருக்கிறேன்”.
அப்பாவிடமும் உங்களுக்கு செய்திகள் கேட்கலாமா என்று கேட்டேன். அவரும் சரி என்று தலையாட்டினார். அப்பா இசை கேட்கிறார். இசைக்கு ஏற்ப விரல்களையும் அசைக்கிறார். பாடவும் முயற்சிக்கிறார். இவை அவர் குணமடைந்து வருவதற்கான நல்ல அறிகுறிகள். அனைவருடைய பிரார்த்தனைக்கும் எனது குடும்பம் நன்றி கடன்பட்டுள்ளது.
இவ்வாறு எஸ்.பி.பி.சரண் கூறியுள்ளார்.