இந்தி பட உலகில் 10 ஆண்டுகளாக போதை பொருள் புழக்கம் உள்ளதாக இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்குழு விசாரிக்கிறது. வாரிசு நடிகர்கள் ஆதிக்கத்தினால் அவர் இறந்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. சுஷாந்த் சிங் காதலி ரியாவுக்கு போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருந்ததாக சர்ச்சை கிளம்பி உள்ளது.
இந்த நிலையில் பிரபல நடிகை கங்கனா ரணாவத், “இந்தி திரையுலகில் கொக்கைன் போதைப்பொருள் தாராளமாக புழங்குகிறது. இந்த போதைப் பொருள் அதிக விலை கொண்டது. ஆனால் முன்னணி நடிகர்கள் வீடுகளில் நடக்கும் பார்ட்டிகளுக்கு சென்றால் அதை இலவசமாகவே வழங்குவார்கள்.போதைப்பொருள் தடுப்பு போலீசார் இந்தி பட உலகுக்குள் நுழைந்தால் பிரபலங்கள் பலர் சிறைக்கு செல்வார்கள். அவர்களுக்கு ரத்த பரிசோதனைகள் செய்தால் அதிர்ச்சியான உண்மைகள் வெளிவரும்” என்றெல்லாம் பரபரப்பு தகவல்களை கூறியுள்ளார்.
இதுபோல் இந்தி இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரியும் குற்றம்சாட்டி உள்ளார். அவர் கூறும்போது, “இந்தி பட உலகில் 10 ஆண்டுகளாக போதை பொருள் புழக்கம் உள்ளது. பட உலகில் உள்ள பிரபலங்கள் இதனை சர்வசாதாரணமாக பயன்படுத்துகிறார்கள். போதைப்பொருள் மட்டுமன்றி மாபியாக்கள், பயங்கரவாத செயல்கள் போன்ற குற்ற சம்பவங்களும் நடக்கின்றன” என்றார். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.