சுமந்து காக்கும் தேவனும்
சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை.
ரெகொபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம்.
ஒருமனிதன் தன்பிள்ளையைச் சுமந்துகொண்டு போவதுபோல, நீங்கள் இவ்விடத்திற்கு வருகிறவரைக்கும், நடந்துவந்த வழிகள் எல்லாவற்றிலும், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சுமந்துகொண்டு வந்ததைக் கண்டீர்களே. உபாகமம் 1:31.
இன்று உலகில் பலதேவர்கள, தெய்வவழிபாடுகள், பலதேவ அனுஸ்டானங்கள் உண்டு. அவைகளின் மத்தியில் என்தெய்வம் என்னை சுமந்து காத்தது என்று எம்மால் கூறமுடியுமா? நம்மால் முடியாது. காரணம் சுமந்து காக்கும் தேவன் ஒன்று நமக்கு உண்டு என்பதை அறியாததே.
ஏன்தேவன் தமது மக்களை சுமந்து காக்க வேண்டும். ஒருசில வேளைகளில் இது ஓர்புரியாத புதிராக இருக்கலாம். நீங்கள் விளங்கிக் கொள்ளும்படியாக சாதாரண மனித வாழ்வில் நடைபெறும் நிகழ்வுகளை அறியத்தருகிறேன்.
உங்களுக்கு குழந்தைகள் இருந்தால் அவர்கள் அழும்போது அல்லது, சிரித்து மகிழும்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? பிள்ளை ஏன் அழுகிறது அல்லது சிரிக்கிறது என்று பார்த்தா தூக்குவீர்கள்? மாறாக எமது அன்பை வெளிப்படுத்து வதற்காக பிள்ளையை நாம் தூக்குவோம். அதேபோலத்தான் தேவனும் தமது அன்பை, இரக்கத்தை மனிதகுலம் அறியும்படியாக சுமந்து காக்கிறார்.
இந்த மிகப்பெரிய உண்மையை நாம் விளங்கிக்கொள்ள கீழ்வரும் வேதப்பகுதியை வாசிப்போம். கர்த்தருடைய ஜனமே அவருடைய பங்கு, யாக்கோபு அவருடைய சுதந்தரவீதம். பாழான நிலத்திலும் ஊளையிடுதலுள்ள வெறுமையான அவாந்தர வெளியிலும் அவர் அவனைக் கண்டுபிடித்தார், அவனை நடத்தினார், அவனை உணர்த்தினார், அவனைத் தமது கண்மணியைப்போலக் காத்தருளினார். கழுகு தன் கூட்டைக் கலைத்து, தன்குஞ்சுகளின்மேல் அசைவாடி, தன்செட்டைகளை விரித்து, அவைகளை எடுத்து, அவைகளைத் தன்செட்டைகளின்மேல் சுமந்துகொண்டு போகிறதுபோல, கர்த்தர் ஒருவரே அவனை வழிநடத்தினார்@ அந்நிய தேவன் அவரோடே இருந்ததில்லை. உபாகமம் 32:9-11.
தேவன் தாம்படைத்த ஒவ்வொருவர் மேலும் தேவன் கரிசனை உள்ளவராக இருக்கிறார். அதன் நிமித்தமாக அவர், தம்மை விட்டுவிலகி சிதறிப்போய் துன்பத் திலும் துயரத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களைக் கண்டுபிடித்து, அவர்களை சரியான பாதையில் நடத்தி, அவர்களை உணரவைக்கிறார். எப்படியாக உன்னைக் காத்து, வழிநடத்தி, சுமந்து வந்தேன் என்பதை அறியும் படியாக. காலடிச் சுவடுகள் என்ற ஆங்கில கவிதையில் (பூட் பிறின்ட்) ஒரு மனிதனின் கனவு இவ்வாறு சித்தரிக்கப்படுகிது. ஒருநாள் நான் ஒரு கடற்கரை ஓரமாக நடந்து கொண்டிருந்தேன். எனக்குப் பின்னால் நான் நடந்து வந்த காலடிச் சுவடுகளைக் கண்டேன். அது வெறும் காலடிச சுவடுகள் அல்ல. மாறக அவை நான் கடந்து வந்த எனது கடந்தகால அனுபவங்கள் என்பதை உணர்ந்து கொண்டேன்.
வாழ்க்கையில் எத்தனை இன்ப துன்பங்களையும், மேடுபள்ளங்களையும் கடந்து வந்துள்ளேன் என்பதை அறிந்து கொண்டேன். என்னுடைய காலடிச் சுவடுகளின் பக்கத்தில் இன்னுமொரு காலடிச் சுவடுகளைக்கண்டு இவை யாருடையவை என சிந்தித்துக் கொண்டிருந்தபோது, ”மகனே” இவை என்னுடைய காலடிச்சுவடுகள் என என் தேவன் என்னை நோக்கிச் சொன்னார். அப்போது என் வாழ்க்கையிலே என் தேவன் என்னுடன் கூட இருந்திருக்கிறார் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன்.
ஆனால் சிலஇடங்களில், அதுவும் மிகவும் துன்பதுயரங்களினால் வேதனைக்கூடாக போன வேளைகளில் ஒருசோடி காலடிச்சுவடுகளை மாத்திரமே கண்டு திகைத்தேன். அப்படியானால் என் வேதனையின் நாட்களில் தேவன் என்னைக் கைவிட்டுவிட்டாரா என எண்ணியபோது, ”மகனே” அது உன்னுடைய காலடிச்சுவடுகள் அல்ல, அவை என்னுடைய காலடிச்சுவடுகள். நீ தாங்க முடியாத வேதனைகளுக்கூடாக போனபோது உன்னால் நடக்க முடியாது என்பதனால் தூக்கிச் சுமந்தேன் என தேவன் கூறினார்.
அருமையான வாசக நேயர்களே, மிகுந்த வேதனைகள், துக்கங்கள், துயரங்கள், பாடுகளின் பாதையோ, தனிமையின் பயணமோ, அல்லது இந்தப் பிரட்சனை எப்படி என்னை விட்டு நீங்கும் என்ற துயரமோ, கலங்காதே உன்னை சுமந்து, உனது சகல வேதனைகளையும் தீர்க்க ஒருதேவன் உண்டென்பதை இன்று அறிந்துகொள். அவர் உன்னைக் கைவிடமாட்டார். காரணம் அவர் உன்னை நேசிக்கும், ஆறுதல் படுத்தும், அரவணைக்கும் தெய்வம். அவருடைய வாக்குறுதிகள் இவ்வாறு கூறுகிறது. தம்மைப்பற்றி (தேவனை) உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் ப10மியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது. 2 நாளாகமம் 16:9. ஏன் கர்த்தருடைய கண்கள் உலாவிக்கொண்டிருக்கிறது? (அவர்) உதவி அற்றமக்களுக்கு உதவி செய்வதற்காக.
இன்று நீ இந்த வேதப்பகுதியை முழுமனதுடன் என்னுடன் சேர்ந்து அறிக்கை பண்ணு. அப்போது தேவன் உனது இருதயத்தின் கதறலைக் கேட்டு உன்னைக் காக்கும்படியாக அவர் உன்னிடம் வருவார். கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன். அவர்துதி எப்போதும் என்வாயிலிருக்கும். கர்த்தருக்குள் என் ஆத்துமா மேன்மைபாராட்டும். சிறுமைப்பட்டவர்கள் அதைக்கேட்டு மகிழுவார்கள். என்னோடே கூடக்கர்த்தரை மகிமைப்படுத்துங்கள், நாம் ஒருமித்து அவர் நாமத்தை உயர்த்துவோமாக. நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார். அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள். அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை. இந்த ஏழை கூப்பிட்டான், கர்த்தர் கேட்டு, அவனை அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சித்தார். கர்த்தருடையது}தன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப்பாளயமிறங்கி அவர்களை விடுவிக்கிறார். இதுதான் தேவன் தரும் பாதுகாப்பு. (வேதப்புத்தகம் உள்ளவர்கள் சங்கீதம் 34ஐ வாசித்து தியானிக்கவும்.
பிதாவே, யார்யார் இந்த ஜெபத்தை என்னோடு ஏறெடுத்தர்களோ அவர்களின் வாழ்க்கையில் வசந்தமும் செழிப்பும் உண்டாகி, தேவ பாதுகாப்பின் ஐசுவரியத்தை அவரவர் தங்களின் வாழ்க்கையில் தினமும் கண்டுகொள்ள உதவிசெய்யும் அப்பா. தேவனைத்தேடி, அதனால் அடையும் தேவபராமரிப்புக்குள் இருந்து உலகம் அவர்களைப் பிரிக்காத வண்ணம் காத்துக் கொள்ளும் பிதாவே. தேவனைத் தேடுவதனால் வரும் நன்மைகளைப்பற்றி அறிந்து கொள்ள உதவும் அலைகள் பத்திரிகை ஆசிரியர் செல்லத்துரை குடும்பத்தினரையும் ஆசீர்வதித்து காத்துக் கொள்ளும் பிதாவே, ஆமென்.
கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.
Bro. Francis T. Anthonypillai. Rehoboth Ministries – Praying for Denmark