இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று 34 லட்சத்தைக் கடந்துள்ளது. பாலிவுட் பிரபலங்கள் பலரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்பு அவர்கள் குணமடைந்து வீடு திரும்பினர்.
இந்நிலையில் நடிகை ஜெனிலியா கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனக்குக் கரோனா தொற்று ஏற்பட்டதாகவும், தற்போது அதிலிருந்து குணமடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
”கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு எனக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த 21 நாட்களாக எனக்கு எந்த அறிகுறியும் இல்லை. கடவுளின் கிருபையால் இன்று எனக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நெகட்டிவ் என்று வந்துள்ளது. இந்த நோய்த்தொற்றுக்கு எதிராக என்னுடைய போராட்டம் எளிமையானதாக இருந்ததற்கு கடவுளுக்கு நன்றி செலுத்துகிறேன்.
ஆனால், அதே நேரத்தில் இந்த 21 நாட்களும் தனிமையில் இருந்தது மிகவும் சவாலான ஒன்றாக இருந்தது என்பதை நான் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். வீடியோ கால்களும், டிஜிட்டல் உலகில் மூழ்குதலும் தனிமையின் கோரமுகத்தைத் தடுத்துவிட முடியாது. என்னுடைய குடும்பத்துடன் மீண்டும் இணைந்ததில் மகிழ்ச்சி.
உங்கள் அன்புக்குரியவர்களுடன் இருங்கள். இதுதான் ஒருவருக்கு மிகவும் தேவையான உண்மையான பலம். விரைவாகப் பரிசோதனை செய்து, ஆரோக்கியமான உணவுகளை உண்டு, திடமாக இருப்பதே இந்தப் பேயை எதிர்த்துப் போராட ஒரு வழி”.இவ்வாறு ஜெனிலியா கூறியுள்ளார்.