பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு கடந்த 5-ந்தேதி சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு கடந்த 5-ந்தேதி சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை குறித்து எம்.ஜி.எம். மருத்துவமனை உதவி இயக்குனர் டாக்டர் அனுராதா பாஸ்கரன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“கொரோனா தொற்றினால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ள எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு அவசர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை தற்போது சீரான நிலையில் உள்ளது. முழு விழிப்புடன் இருக்கிறார். சொல்வதை புரிந்து கொள்கிறார். பிசியோ தெரபி சிகிச்சையிலும் பங்கேற்று வருகிறார். அவரது உடல்நிலையை மருத்துவ குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.”
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்.பி.பி.சரண் நேற்று வெளியிட்டுள்ள வீடியோவில், “எனது அம்மாவை பற்றி பலர் விசாரித்தனர். அவர் நலமுடன் ஆரோக்கியத்தோடு இருக்கிறார். வீட்டுக்கு திரும்பி உள்ளார்.
அப்பாவை மருத்துவமனையில் சென்று பார்த்தேன். அவரது நுரையீரல் எக்ஸ்ரேவை மருத்துவர்கள் காண்பித்தனர். அதில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. பிசியோ தெரபி சிகிச்சையும் அளிக்கப்படுகிறது.
அப்பா நீண்ட நாட்கள் படுக்கையில் இருந்ததால் தசைகள் வலுவடைய உடற்பயிற்சியும் செய்கிறார். அவரது சுவாசமும் சீராகி உள்ளது. உடல்நிலையில் முன்னேற்றம் தெரிகிறது. அனைவருடைய பிரார்த்தனைகளோடு விரைவில் மீண்டு வருவார்.” என்று கூறியுள்ளார்.