புதிய அரசாங்கம் இருபத்தெட்டு அமைச்சரவை அமைச்சுக்களையும் முப்பதுக்கும் மேற்பட்ட இராஜாங்க அமைச்சர்களையும் உள்ளடக்கி ஒருபாரிய அமைச்சர் பட்டாளத்தை உருவாக்கியிருக்கின்றது.
புதிய அமைச்சரவையில் கடந்தகாலத்தில் செயற்பட்ட இந்து மதவிவகாரம், அரசகருமமொழிகள் அமுலாக்கம், இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் ஆகிய அனைத்து அமைச்சுக்களும் இன்று இல்லாமல் செய்யப்பட்டுள்ளன.
மேற்கண்ட செயல்களின் மூலம் பிற தேசிய இனங்களின் அடையாளத்தையும் இருப்பையும் அச்சுறுத்துவதுதான் ராஜபக்ஷக்களின் அரசாங்கத்தின் நோக்கமா என்ற கேள்வி எழுகின்றது என்று தெரிவித்துள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப் பேச்சாளருமான சுரேஷ் க.பிறேமச்சந்திரன் அரசாங்கத்தின் இந்தப் போக்கைக் கண்டித்துவிடுத்துள்ள அறிக்கையின் முழுவிபரம் வருமாறு:
இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் தமிழ் மொழி அரச கருமமொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் இதுவரை அது முழுமையாக நடைமுறையில் இல்லை என்பதும் அரசினுடைய பல்வேறு திணைக்களங்களிலும் அமைச்சுக்களிலும் இன்னமும் தனிச்சிங்களத்திலேயே சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன என்பதும் தமிழாசிரியர்கள் உட்பட பல அரச தரப்பினரும் இன்னமும் சிங்கள மொழியிலேயே கடிதங்களையும் சுற்றுநிருபங்களையும் பெறுகிறார்கள் என்பதும் வெளிப்படையானஉண்மை.
இவ்வாறான சூழ்நிலையில், தமிழ் மொழி அமுலாக்கல் அமைச்சு அல்லது அரச கரும மொழி அமுலாக்கல் அமைச்சு என்பதை இல்லாமல் செய்தது என்பதுதான் விரும்பியவாறு தனிச் சிங்களத்தில் அரசகருமங்களை நடாத்துவதற்கான ஓர் முயற்சியாகவே நாங்கள் கருதுகிறோம்.
அதனைப் போலவே, இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சியாக கடந்தஅரசாங்கத்தில் பெயரளவிற்காவது தேசிய நல்லிணக்க அமைச்சு என்று ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது.
இன்று அதுவும் இல்லாமல் செய்யப்பட்டிருக்கின்றது.
இந்து சமய கலாசார அமைச்சோ, கிறிஸ்தவ, இஸ்லாமிய சமயங்கள் தொடர்பான அமைச்சுக்களோ உருவாக்கப்படவில்லை என்பதும் இந்த அரசாங்கத்தினுடைய சிங்கள பௌத்த மேலாதிக்க சிந்தனையைமிகத் தெளிவாக வெளிப்படுத்தி நிற்கின்றது.
பௌத்த சிங்கள வாக்குகளால் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் பொறுப்பேற்றுள்ள இந்த அரசாங்கமானது பத்தொன்பதாவது திருத்தத்தை மாற்றுவது, பதின்மூன்றாவது திருத்தத்தை மாற்றுவது, புதியஅரசியல் சாசனத்தைக் கொண்டு வருவது என்று பல்வேறு பட்ட கருத்துருவாக்கங்களில் ஈடுபட்டு வருகின்ற அதேசமயம், ஒரு குடும்ப ஆட்சியை உருவாக்கக் கூடிய வகையிலும் அந்த குடும்ப ஆட்சியினூடாக சர்வாதிகார ஆட்சியை நிலைநிறுத்தக்கூடிய வகையிலும் செயற்பட்டு வருகின்றது.
இலங்கை ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் அண்மைக்காலமாக எடுத்து வரும் ஒவ்வொரு முடிவுகளும் நடவடிக்கைகளும் சிறுபான்மைத் தேசிய இனங்களை அழித்தொழிக்கும் அடிப்படையிலும் அவர்களின் இருப்புக்களைக் கேள்விக்குள்ளாக்கும் அடிப்படையிலுமே மேற்கொள்ளப் பட்டு வருகின்றது.
கிழக்கு மாகாணத்தில் உருவாக்கப்பட்ட தொல்பொருள் சின்னங்களை அடையாளமிடுவதற்கும் பாதுகாப்பதற்கும் முழுக்க முழுக்க பௌத்த சிங்கள மேலாதிக்க சிந்தனையில் மூழ்கித் திளைக்கின்ற அதிகாரிகளை உள்ளடக்கிய ஜனாதிபதி செயலணியை உருவாக்கிய தென்பதும், வடக்கு மாகாணத்தில் மகாவலி அபிவிருத்தி அதிகார சபை என்ற அடிப்படையில் தமிழ் மக்களின் காணிகளைச் சுவீகரிப்பதும் அதே போன்று படையினர் தமிழ் மக்களுக்கு உரித்தான காணிகளைப் பலாத்காரமாக பறித்து வருவதும் இங்கு குறிப்பிட வேண்டிய விடயங்கள் என்பதுடன, காலாதி காலமாக செய்கை செய்யப்பட்டு வந்த வயல் நிலங்கள் உட்பட தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகள் மிகப்பெருமளவில் வனவளப் பாதுகாப்புக்கும் வனஜீவராசிகள் பாதுகாப்பிற்குமாகதான் தோன்றித்தனமான முறையில் பறிமுதல் செய்யப்படுவதையும் பார்க்கின்றோம்.
தமிழ் மக்கள் தமதுஉயிர்ப்பாதுகாப்புக்கு அச்சப்படுவதற்கும் மேலாக, தமது வாழ்வாதாரங்கள், காணிகள், நிலங்கள் அனைத்தும் அவர்களின் கைகளைவிட்டுப் பறிக்கப்படும் ஒரு அச்சசூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.
இவற்றுக்கு எதிராகக் குரல்கொடுக்கக்கூடிய எவரும் தமிழ் இனவாதிகள் என்றும் பிரிவினைவாதிகள் என்றும் பிரபாகரனின் வாரிசுகள் என்றும் முத்திரை குத்தப்படுகின்றார்கள்.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் உட்பட அனைவருமே சிறுபான்மை தேசிய இனங்களுக்கு எதிரான பல்வேறுபட்ட கொள்கைகளை வெளியிடுபவர்களாகவே தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றனர்.
ஒரே நாடு ஒரே சட்டம் என்று பேசுபவர்கள், இந்தநாட்டில் பல்வேறு பட்ட தேசிய இனங்கள் இருக்கின்றன.
அவர்களுக்கான மத, கலாசார, பண்பாட்டு அடையாளங்கள் இருக்கின்றன என்பதுடன், அம்மக்களுக்கான பாரம்பரிமிக்க தேச வழமைச் சட்டங்களும் அவர்களது மதவிழுமியங்களைக் காப்பதற்கான சட்டதிட்டங்களும் இருந்து வருகின்றன அவை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக பல இலட்சம் மக்களை இழந்து அவர்கள் போராடி வந்துள்ளனர் என்பதை மறந்து, அவ்வாறானவர்களின் கருத்துக்களைத் தூக்கியெறிந்து அதனை ஒருபொருட்டாக வேமதிக்காமல், இவர்கள் எதேச்சாதிகாரமாக நடப்பது என்பது இந்தநாட்டில் இனங்களுக்கிடையில் மேலும் மேலும் விரிசல்களை உருவாக்குவதற்கே உதவும்.
-யாழ். நிருபர் பிரதீபன்-