துபாயில் ஒரு வங்கியில் பணிபுரிகிற ரோஷன் மேத்யூஸ், ஒரு டேட்டிங் செயலியில் தர்ஷனாவைச் சந்திக்கிறார். இருவருமே நிறைய உரையாடுகிறார்கள். ஒரே வாரத்தில் காதலிக்கிறேன் என்று முடிவு செய்து திருமணம் செய்து கொள்ளலாமா என்று தன் அம்மா முன் வீடியோ காலில் தர்ஷனாவிடம் கேட்கிறார் ரோஷன் மேத்யூஸ். ஆனால், தர்ஷனாவை வீட்டில் கொடுமைப் படுத்துகிறார்கள் என ரோஷனுக்குத் தெரிய வருகிறது. தொடர்ந்து சில மர்மமான விஷயங்கள் நடந்து, தர்ஷனா காணாமல் போய்விடுகிறார். அவருக்கு என்ன ஆனது, நிஜமாகவே அவர் நல்லவரா அல்லது கெட்டவரா.. இது எல்லாவற்றுக்குமான விடையே ‘சி யூ ஸூன்’
தர்ஷனா ராஜேந்திரன், ரோஷன் மேத்யூஸ், ஃபகத் பாசில் என இந்த வரிசையிலே நடிப்பையும் பாராட்டலாம். இவர் அப்பாவியா, இல்லையென்றால் ஏதேனும் திட்டமிடுகிறாரா என்று கடைசி வரைக்கும் யோசிக்க வைக்கிற தர்ஷனாவின் நடிப்புதான் படத்துக்கு மிகப்பெரிய பலம். தர்ஷனாவின் கதாபாத்திரம் படைக்கப்பட்ட அளவுக்கு ரோஷன் மேத்யூஸ், ஃபகத் பாசில் ஆகியோருடைய பாத்திரங்கள் பற்றி பெரிதாகச் சொல்லப்படவில்லை.
நிறைய நாமே ஊகம் செய்து கொள்ள வேண்டியதாக இருக்கிறது. ஆனால், ரோஷன் மேத்யூஸ், ஃபகத் பாசில் இருவருமே அவர்களுடைய கதாபாத்திரத்தைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். எதுவுமே பேசாமல், வாய்ஸ் ஓவர் இல்லாமல், ஸ்க்ரீனை மட்டுமே பார்த்து அந்த கேரக்டர் நினைப்பில் என்ன ஓடியிருக்கலாம் என்று நம்மை யோசிக்க வைக்கிற அந்த நடிப்பில் தனித்துவத்துடன் நிற்கிறார் ஃபகத்.
ஊரடங்கில் எடுத்த படம், ஐபோனில் எடுத்த படம் என்று சொல்லிக் கொண்டாலும் தொழில்நுட்ப ரீதியாக எந்தவித சமரசமும் படத்திலிருந்ததாகத் தெரியவில்லை. படத்தின் ஒளிப்பதிவு நிறையக் காட்சிகளில் இப்படி இதெல்லாம் இந்த நேரத்தில் காட்சிப்படுத்தியிருப்பார்கள் என நம்மை யோசிக்க வைக்கிறது. முக்கியமாக துபாயில் நடக்கும் காட்சிகளைச் சொல்லலாம்.
கோபி சுந்தருடைய பின்னணி இசை பெரும்பாலும் கச்சிதமாக இருந்தாலும் இன்னும் சில இடங்களில் கூடுதலாக மெளனத்துக்கு இடம் கொடுத்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
வசனமே இல்லாத படம், ஒரே டேக்கில் எடுத்த படம், ஒரே நாளில் நடக்கும் கதை என்று மக்களின் கவனத்தை ஈர்க்க புதிது புதிதாக நிறையப் படைப்புகள் வருகின்றன. ஆனால், அதை எல்லாம் தாண்டி சுவாரசியமான திரைக்கதை இருந்தால் மட்டுமே அந்தப் படம் நிற்கும். கணினி, மொபைல், சிசிடிவி உள்ளிட்ட திரைகளை வைத்துச் சொல்லப்பட்டிருக்கும் புதிய வகை திரைப்படம் இந்த ‘சி யூ ஸூன்’. இதில் கதை வழக்கமானதாகத் தோன்றினாலும் கூட தனது சுவராசியமான திரைக்கதையினால் அதை மறக்க வைக்கிறார் இயக்குநர் மகேஷ் நாராயணன்.
கதாபாத்திர அறிமுகம், கொஞ்சம் கொஞ்சமாகப் பார்வையாளர்கள் மனதிற்குள் உருவாகும் சந்தேகம், மோதல், விசாரணை, திருப்பங்கள், உண்மை தெரியவருவது என எங்கேயும் தொய்வின்றிக் கொண்டுபோன விதத்தில் பரீட்சார்த்த முயற்சி என்று வரும் திரைப்படங்கள் சுவாரசியமாகவும் இருக்கலாம் என்று காட்டியிருக்கிறார்கள். இதற்கு நடிகர்களின் நடிப்பும் பெருமளவில் துணை புரிந்திருக்கிறது.
இப்படியான ஒரு கதையில் நிறைய வரம்புகள் இருக்கும்போது, சில கதாபாத்திரங்கள் இருந்தாலும் அவை பெரிய தாக்கத்தை உருவாக்காமல் போக வாய்ப்பிருக்கிறது. தர்ஷனாவின் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தது மூலம் அந்தக் குறை தெரியாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், ரோஷன் மேத்யூஸ் ஏன் துபாய் போலீஸ் என்றால் இவ்வளவு பயப்படுகிறார், இதற்கு முன் அவர் வாழ்க்கை என்ன என்று சொல்லியிருக்கலாம். அந்தக் கதாபாத்திரத்தின் மீது சந்தேகம் வருவதற்காக அதைச் சொல்லாமல் விட்டுள்ளனர் என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால், எதையும் எளிதாக ஹேக் செய்யும் கணினி வல்லுநராக ஃபகத் பாசில் கதாபாத்திரம், படத்தின் இறுதியில் உணர்கிற விஷயங்கள் நமக்குச் சொல்லாமலே புரியும் அளவுக்கு அவருடைய கதாபாத்திரத்தின் அசல் தன்மை புரியவில்லை.
குறைகள் சில இருந்தாலும் 98 நிமிடங்களில் நமது நேரத்தை அதிகம் வீணடிக்காமல், கொடுக்கும் நேரத்தையும் பரபரப்பாக நகர்த்துகிறது ‘சி யூ ஸூன்’. நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்கள் சுமாராகத்தான் இருக்கும் என்கிற நம்பிக்கையை உடைத்திருக்கும் முதல் படம் என்று நம்பிக்கையாகச் சொல்லலாம்.