ஜனாதிபதியின் எண்ணக்கருவின் கீழ் செயற்படுத்தப்படுகின்ற ஒரு இலட்சம் வேலைவாய்ப்பில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் புறக்கணிக்கப்பட மாட்டாதென்றும் இப் பிரதேசங்களுக்கான ஒதுக்கீடு உரிய முறையில் விரைவில் வழங்கப்படுமென்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் உறுதியளித்துள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இவ் விடயம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் பிரஸ்தாபிக்கப்பட்ட போதே ஜனாதிபதி மற்றும் பிரதமர் இவ் உறுதிமொழியை வழங்கினார்கள்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வாக்குறுதிக்கமைய நாடு முழுவதும் வறிய குடும்பங்களுக்கு ஒரு இலட்சம் அரசாங்க வேலைவாய்ப்பை பெற்றுக்கு கொடுக்கும் செயற்றிட்டம் வடக்கு, கிழக்கு தவிர்ந்த நாட்டின் ஏனைய பிரதேசங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இவ் விடயம் தொடர்பில் அமைச்சரவை கூட்டத்தின்போது பிரஸ்தாபித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாட்டின் ஏனைய பிரதேச மக்களைப் போன்று வடக்கு, கிழக்கு மக்களும் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு திட்டத்தின் பலாபலன்களை பெற்றுக்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தினார். இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர், ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பதில் இந்த அரசாங்கம் உறுதியாக இருக்கின்றது என்ற அடிப்படையில், எந்த வகையான பிரதேச – இன – மத ரீதியான பாகுபாடுகள் தலை தூக்க இடமளிக்கப்படாது. ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு தற்போது ஒரு சில காரணங்களுக்காக தற்காலிகமாக தடுத்து நிறுத்தப்பட்ட போதிலும் விரைவில் வடக்கு, கிழக்கு பிரதேங்களுக்கான நியமனங்கள் வழங்கப்படும். எனவே இப் பிரதேச மக்கள் குழப்பமடையத் தேவையில்லை என்றார்.