கரோனா நோயாளி மீது பாலியல் வன்கொடுமை

கடந்த சனிக்கிழமையன்று கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்ட பெண் கரோனா நோயாளியை ஆம்புலன்ஸ் ஓட்டுநரே பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகார்கள் அங்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து கேரள பாஜக, கேரள மாநில அரசின் சுகாதார அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று குரல் எழுப்பியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா, சுகாதார அமைச்சகம்தான் இந்தக் குற்றத்துக்குக் காரணம் என்று கடுமையாகச் சாடியுள்ளார். பந்தளத்திலிருந்து அடூருக்கு கரோனா நோயாளியை ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்ற போது சுகாதாரப் பணியாளர் ஒருவரும் இல்லாததே இதற்குக் காரணம் என்று எதிர்க்கட்சிகள் கடுமையாகச் சாடி வருகின்றனர்.
ஓட்டுநரின் குற்றப்பின்னணி:
ஆம்புலன்ஸ் ஓட்டுநர் குற்றப்பின்னணி உள்ளவர், கொலை வழக்கு ஒன்றில் போலீசார் ஓட்டுநரை குற்றவாளியாகச் சேர்த்திருப்பதும் தெரியவந்துள்ளது. ஆனால் சுகாதார அதிகாரிகள் இவரது குற்றப்பின்னணியை எப்படி மறந்தார்கள் என்பதுதான் தற்போது சர்ச்சையாகியுள்ளது. கேரள சுகாதார துறை தங்கள் அயோக்கியத்தனத்துக்கு பதில் கூறியே ஆக வேண்டும் என்று காட்டமாகக் கூறுகிறார் சென்னிதலா.
இதன் காரணமாக பத்தனம்திட்டாவில் போராட்டங்கள் தொடங்கியுள்ளன. காங்கிரஸ் மற்றும் பாஜக தனித்தனியே போராட்டம் நடத்தின கேகே ஷைலஜா ராஜினாமா செய்ய வேண்டும் என்று அங்கு கோரிக்கைகள் வலுப்பெற்று வருகின்றன. சுகாதாரப் பணியாளர் இல்லாமல் வெறும் ட்ரைவருடன் மட்டுமே கோவிட்-19 நோயாளியை அதுவும் பெண் நோயாளியை அழைத்துவர அனுப்பியது அயோக்கியத்தனம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. ஓட்டுநர் வழக்கமான பாதையை விட்டு விலகி பலாத்காரம் செய்வதற்காகவே நடமாட்டம் இல்லாத இடத்துக்கு ஆம்புலன்ஸை கொண்டு சென்றுள்ளான்.
மாநில அரசுக்கு பெண்கள், குழந்தைகள் மேல் அக்கறையில்லை. குற்றத்துக்கு அவர்களை ஆளாக்கும் விதமாகவே மாநில அரசு நடந்து கொள்கிறது என்று மாநில பாஜக தலைவர் கடுமையாகச் சாடியுள்ளார்.
கேரள மகளிர் ஆணைய தலைவர் ஜோசபைன், பத்தனம்திட்டா போலீஸ் உயரதிகாரியிடம் இது தொடர்பான அறிக்கையைக் கேட்டிருப்பதாகத் தெரிவித்தார். மகளிர் ஆணையம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

Related posts