உலகளவில் கரோனாவில் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் பிரேசிலை பின்னுக்குத் தள்ளி இந்தியா 2-வது இடம் பிடித்துள்ளது.
இந்தியாவில் நாளுக்கு நாள் கரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட புள்ளிவிவரங்கள் படி கடந்த 24 மணிநேரத்தில் 90 ஆயிரத்து 802 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பு 42 லட்சத்து 4 ஆயிரத்து 613 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,016 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 71 ஆயிரத்து 642 ஆக அதிகரித்துள்ளது.
உலகளவில் கரோனாவில் மோசமாக பாதிக்கப்பட்ட முதல் 5 இடங்களில் அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்த இடத்தில் இந்தியா, ரஷ்யா, பெரு ஆகிய நாடுகள் இருந்தன. இதில் அமெரிக்காதான் மோசமான பாதிப்பை கரோனாவில் அடைந்து வருகிறது. அந்நாட்டில் இதுவரை கரோனாவால் 64 லட்சத்து 60 ஆயிரத்து 250 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 250 பேர் உயிரிழந்தனர்.
2-வது இடத்தில் பிரேசில் நாடு இருந்த நிலையில், இந்தியா அந்நாட்டை முந்தியுள்ளது. இந்தியாவில் கரோனாவில் 42 லட்சத்து 4 ஆயிரத்து 613 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், பிரேசிலில் கரோனாவில் 41 லட்சத்து 37 ஆயிரத்து 606 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை பிரேசலில் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 686 பேர் உயிரிழந்தனர். பிரேசிலில் கடந்த 24 மணிநேரத்தில் 14 ஆயிரத்து 606 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டனர், 456 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில நாட்களாகவே பிரேசிலில் உயிரிழப்பும், கரோனாவில் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.
இந்தியாவில் கரோனாவில் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதே போக்கில் சென்றால், இந்தியாவுக்கும் பிரேசிலுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி கரோனா பாதிப்பில் ஏற்படும்.
இந்தியாவைப் பொறுத்தவரை அதிகமான கரோனா நோயாளிகள் நாள்தோறும் மகாராஷ்டிரா, தமிழகம், கர்நாடகா, உத்தரப்பிரதேசம்,ஆந்திராபிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில்தான் கண்டறியப்படுகின்றனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுவரை இந்தியாவில் 32.5 லட்சம் பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்ிதல் 69 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இருப்பினும் கரோனா நோயாளிகள் நாள்தோறும் அதிகரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.