கன்னட திரையுலகில் போதை மருந்து பயன்பாடு குறித்து விசாரித்து வரும் மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர், நடிகை சஞ்ஜனா கல்ரானியை கைது செய்துள்ளனர்.
ஏற்கனவே, பெங்களூரு நகரத்தில் பார்ட்டிகளில் போதை மருந்து விநியோகம் செய்த குற்றத்துக்காக, நடிகை ராகினி த்விவேதியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். செவ்வாய்க்கிழமை காலை அன்று, சஞ்ஜனாவின் வீட்டில், உரிய அனுமதி பெற்ற பின் மத்தியக் குற்றப் பிரிவினர் சோதனை செய்தனர். தொடர்ந்து சஞ்ஜனா விசாரணைக்காக, குற்றப் பிரிவு அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஏற்கனவே இந்த வழக்கில் கைதாகியிருக்கும் ராகுல் என்பவர் சஞ்ஜனாவின் நண்பர். ராகுலின் கைதிலிருந்தே சஞ்ஜனா கண்காணிக்கப்பட்டு வந்ததாகத் தெரிகிறது.
இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தைத் தொடர்ந்து நடிகை கங்கணா ரணவத், பாலிவுட்டில் போதை மருந்து கும்பலுக்கு, பெரிய பாலிவுட் நட்சத்திரங்களுக்கும் தொடர்பிருப்பதாகக் குற்றம் சாட்டியிருந்தார். இதைத் தொடர்ந்து கன்னட இயக்குநர் இந்திரஜித் லங்கேஷ், போதை மருந்து கன்னட திரையுலகிலும் வேரூன்றிவிட்டது என்று குற்றம்சாட்டினார்.
இதன் பின் காவல்துறையினர் செய்த விசாரணையில், அடிக்கடி போதை மருந்து பார்டிகளுக்குச் செல்லும் 15-20 நட்சத்திரங்களின் பெயர்களைக் லங்கேஷ் குறிப்பிட்டதாகச் சொல்லப்படுகிறது.
சஞ்ஜனா கல்ரானி தமிழில் ஒரு காதல் செய்வீர் என்கிற திரைப்படத்தில் மட்டுமே நடித்துள்ளார். தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் பிரபல நடிகை நிக்கி கல்ரானியின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.