பாடகர் எஸ்.பி.பியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 15 முதல் 20 நிமிடங்கள் வரை மருத்துவர்கள் உதவியுடன் எஸ்.பி.பி. எழுந்து அமர்கிறார் என்று அவரது மகன் எஸ்.பி சரண் தகவல் தெரிவித்துள்ளார்.
பிரபல பின்னணி பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம் கடந்த மாதம் 5 ஆம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எஸ்.பி.பி. உடல்நிலை மோசமாக இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அவரது திரையுலக நண்பர்களும், ரசிகர்களும் அவருக்காக பிரார்த்தனை செய்தனர்.
அதன் எதிரொலியாக எஸ்.பி.பி. தற்போது கொரோனாவிலிருந்து மீண்டுள்ளார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் எஸ்.பி.பியின் மகன் சரண் வெளியிட்ட வீடியோவில், தந்தையின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நுரையீரல் செயல்பாடு முன்னேறியுள்ளது. குணமாகி வருவது எக்ஸ்ரேவில் நன்றாகத் தெரிகிறது. பிசியோதெரபியும் நடந்து வருகிறது.
தந்தை சுறுசுறுப்புடன் பங்கேற்று வருகிறார். மருத்துவர்கள் தந்தையை உட்கார வைத்தார்கள். தந்தையால் தொடர்ந்து 15-20 நிமிடங்களுக்கு உட்கார முடிகிறது. வாய் வழியாகச் சாப்பிட வைப்பதற்கான முயற்சிகள் நடக்கின்றன.
அனைத்து அறிகுறிகளும் நன்றாக உள்ளன. தந்தை உடல்நிலை சீராக உள்ளது. உங்கள் அன்பு, அக்கறை மற்றும் உங்கள் அனைவருடைய பிராத்தனைகளுக்கும் நன்றி.
இவ்வாறு எஸ்.பி.சரண் தெரிவித்துள்ளார்.