மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாறா’ படத்தை ஓடிடியில் வெளியிடப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
2015-ம் ஆண்டின் கிறிஸ்துமஸ் விடுமுறையைக் கணக்கில் கொண்டு கேரளாவில் வெளியான மலையாளப் படம் ‘சார்லி’. துல்கர் சல்மான், பார்வதி மேனன், அபர்ணா கோபிநாத், நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்தை மார்டின் ப்ராகாட் இயக்கியிருந்தார். இந்தப் பாடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பிரமோத் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றி தயாரித்துள்ளது. மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஷிவதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பல்வேறு விளம்பர படங்களை இயக்கிய திலீப் குமார் இயக்கியுள்ளார்.
கரோனா அச்சுறுத்தலுக்கு முன்பே இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஒட்டுமொத்த இந்தியாவில் இன்னும் கரோனா அச்சுறுத்தல் குறையாத காரணத்தால், திரையரங்குகள் திறப்பது தொடர்பாக மத்திய அரசு இன்னும் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை.
இதனால் தயாராகியுள்ள படங்கள் யாவும் ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. தமிழில் ‘பொன்மகள் வந்தாள்’, ‘பெண்குயின்’, ‘லாக்கப்’, ‘காக்டெய்ல்’, ‘டேனி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ‘சூரரைப் போற்று’ மற்றும் ‘க/பெ ரணசிங்கம்’ ஆகிய படங்கள் ஓடிடி வெளியீட்டை உறுதிப்படுத்தியுள்ளன.
தற்போது பல படங்கள் ஓடிடி வெளியீட்டிற்காகப் பேச்சுவார்த்தையும் தொடங்கியுள்ளனர். இவற்றில் இணைந்துள்ளது ‘சார்லி’ ரீமேக்கான ‘மாறா’. அமேசான் ப்ரைம் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஐபிஎல் போட்டிகள் தொடங்கவுள்ளதால், அக்டோபர் மாத வெளியீடு இல்லாமல் நவம்பரில் ‘மாறா’ ஓடிடியில் வெளியாகும் எனத் தெரிகிறது.