கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள படங்கள் யாவும் ஓடிடியில் வெளியிடத் திட்டமிடப்பட்டு வருகிறது.
தென்னிந்திய மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழில் விஜய்யுடன் ‘பைரவா’ மற்றும் ‘சர்கார்’ ஆகிய படங்களில் நாயகியாக நடித்துள்ளார். தற்போது ரஜினி நடித்து வரும் ‘அண்ணாத்த’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கரோனா அச்சுறுத்தலுக்கு முன்பு பல்வேறு படங்களில் நடித்து முடித்தார் கீர்த்தி சுரேஷ். தற்போது திரையரங்குகள் இன்னும் திறக்கப்படவில்லை என்பதால், அவை அனைத்துமே ஓடிடி-யில் வெளியிடத் திட்டமிடப்பட்டு வருகிறது.
முதலில் தமிழில் உருவான ‘பெண்குயின்’ திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. அதனைத் தொடர்ந்து தெலுங்கில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘மிஸ் இந்தியா’ மற்றும் ‘குட்லக் சகி’ ஆகிய படங்கள் ஓடிடி வெளியீட்டுக்குப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
இதில் ‘மிஸ் இந்தியா’ படம் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், நடிகர் நிதினுக்கு நாயகியாக நடித்துள்ள ‘ரங் தே’ படமும் ஓடிடி வெளியீட்டுக்குப் பேச்சுவார்த்தையில் களமிறங்கியுள்ளது. இதனால் கீர்த்தி சுரேஷ் நடித்து முடித்துள்ள படங்கள் அனைத்துமே ஓடிடி வெளியீடு என்பது முடிவாகியுள்ளது.
மலையாளத்தில் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் உடன் நடித்துள்ள ‘மராக்கர்’ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக வாய்ப்பில்லை. ஏனென்றால், அந்தப் படம் பெரும் பொருட்செலவில் உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.