வடக்கு மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவது தொடர்பான பல்வேறு திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்கின்ற போது அதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எதிராக செயற்படுவதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் குற்றஞ்சாட்டினார். கிளிநொச்சி நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள ச.தோ.ச கட்டடம் கரைச்சி பிரதேச செயலகத்தின் அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக நிலம் அபகரிக்கப்பட்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளதென தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஸ்ரீதரன் எம்.பி நேற்று பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர்,
நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கிணங்கவே மேற்படி இடம் பெறப்பட்டு ச.தொ.ச. கட்டடம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அது தொடர்பில் சிக்கல்கள் இருக்கும். ஆனால் தாம் கிளிநொச்சிக்கு நேரடியாக விஜயம் செய்து அந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.
சிறிதரன் எம்.பி தமது கேள்வியின் போது கிளிநொச்சி, கரைச்சி பிரதேச சபை அதிகாரத்துக்குட்பட்ட பகுதியிலேயே எந்த அனுமதியுமின்றி மேற்படி காணி பெறப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் காட்டுச் சட்டம் நடைமுறையில் உள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர், நகர அபிவிருத்தி சபைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கிணங்க எந்த ஒரு கட்டடத்தையும் நிர்மாணிப்பதற்கு அதற்கு அதிகாரம் உள்ளது.
அதன்படி மேற்படி காணிபெறப்பட்டு அப்பகுதியில் ச.தோ.ச கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.வடக்கு மக்களின் பொருளாதார முன்னேற்றம் கருதியே அரசாங்கம் இத்தகைய நடவடிக்கைகளை வடக்கில் மேற்கொள்கின்றது. எனினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மக்கள் நலனுக்காக அரசாங்கம் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தடையாக செயற்படுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்