புத்தாக்கத் துறையில் உலகில் சிறந்து விளங்கும் நாட்டை உருவாக்குவதற்கான சூழலை ஏற்படுத்துவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
உள்நாட்டு, வெளிநாட்டு சந்தைகளின் கேள்விக்கு ஏற்ற வகையில் சர்வதேச தரம் வாய்ந்த வினைத்திறன்மிக்க தொழிநுட்ப வல்லுனர்களை உருவாக்குவது முக்கிய தேவையாகும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
சாதாரண தரம் அல்லது உயர் தரத்தில் சித்தியடைந்த, சித்தியடையாத அனைவருக்கும் தொழிநுட்பம் மற்றும் தொழிற் கல்வியை வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தை குறுகிய காலத்தில் ஆரம்பிக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
திறன்விருத்தி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி, புத்தாக்கத் துறை இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக நேற்று (22) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
பொருளாதாரத்திற்கு ஏற்ற வகையில் இளைஞர் தலைமுறையை கல்வித் துறையில் ஈடுபடுத்துவதன் அவசியம் குறித்து விளக்கிய ஜனாதிபதி, கலை பாடங்களை கற்கும் மாணவர்களுக்கு தகவல் தொழிநுட்பம்இ தாதி மற்றும் முகாமைத்துவம் உள்ளிட்ட பல துறைகளில் திறமைகளை வளர்த்துக்கொள்ள முடியுமென்றும் குறிப்பிட்டார்.
ஆராய்ச்சி துறையை ஊக்குவிப்பதற்கு அரசு என்ற வகையில் அனைத்து உதவிகளையும் வழங்குவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். புத்தாக்க நடவடிக்கைகளுக்கு உதவுவதற்கு ஆலோசனை மற்றும் சேவைகளை வழங்குவதை ஒரே நிறுவனத்தின் கீழ் கொண்டு வர உள்ளதாக இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சீத்தா அரம்பேபொல குறிப்பிட்டார்.
கோள் மண்டலத்தை தற்காலத்திற்கு பொருத்தமான வகையில் நவீனமயப்படுத்தவும் நனோ தொழிநுட்ப நிறுவனம் (SLINTEC) மற்றும் உயிர் தொழிநுட்ப பூங்கா ஆகிய இரண்டையும் ஒரே வளாகத்தில் தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை இராஜாங்க அமைச்சர் சீத்தா அரம்பேபொல சுட்டிக்காட்டினார்.
தேசிய அடிப்டை ((NIFS நிறுவனம் மற்றும் நனோ தொழிநுட்ப நிறுவனம் இணைந்து ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத் துறைகளில் ஈடுபட வேண்டியதன் அவசியம் பற்றி ஜனாதிபதி தெரிவித்தார்.
பல்கலைக்கழகங்கள், தொழிற்கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிநுட்பக் கல்லூரிகளின் பாடத்திட்டங்கள் மற்றும் கலைத்திட்டங்களை தற்காலத்திற்கு ஏற்ற வகையில் அறிமுகப்படுத்துவதற்கு துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
உயர் கல்வி சட்ட திருத்தத்தின் மூலம் நிறுவன மற்றும் கலைத்திட்டம் தொடர்பில் உள்ள பல பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க முடியுமென நிபுணர்கள் சுட்டிக்காட்டினர்.
தொழிநுட்ப பாடங்களுக்கான ஆசிரியர்கள் மற்றும் ஆலோசகர்களை இணைத்துக் கொள்ளும்போது குறைந்த மட்டத்தில் இருக்கும் சம்பள திட்டங்கள் பெரிதும் பாதிப்பு செலுத்துவதாக நிறுவன தலைவர்கள் தெரிவித்தனர்.
சமுத்திர பொருளாதாரத்தின் விளைவுகளை பெற்றுக்கொள்வதற்கு மீனவ சமூகங்களிடம் சென்று தொழிநுட்ப அறிவு மற்றும் பயிற்சியை வழங்குவதற்கு சமுத்திர பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொருளாதார புத்தெழுச்சிக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர, அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்கள், துறைசார் அமைச்சுக்களின் தலைவர்கள் மற்றும் நிபுணர்கள் இக்கலந்துறையாடலில் பங்குபற்றினர்.