தீ விபத்திற்குள்ளான MT New Diamond கப்பலின் உரிமையாளர்கள் இலங்கைக்கு 340மில்லியன் ரூபா நட்ட ஈட்டை வழங்குவதற்கு இணங்கியுள்ளதாக, சட்ட மாஅதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி, சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை கப்பலின் உரிமையாளர்களினால் சட்ட மாஅதிபர் தப்புல டி லிவேராவுக்கு அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
MT New Diamond கப்பலில் ஏற்பட்ட தீயை அணைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக, கடற்படை, வான்படை உள்ளிட்ட அனைத்து பிரிவினராலும் மேற்கொள்ளப்பட்ட தீயணைப்பு, மீட்பு, பராமரிப்பு செலவாக ரூபா 340மில்லியனை (ரூ. 34கோடி) நஷ்டஈடாக செலுத்துமாறு சட்ட மாஅதிபர் தப்புல டி லிவேரா, கடந்த வாரம் கோரிக்கையொன்றை விடுத்திருந்தார்.
குறித்த கப்பல் உரிமை நிறுவன சட்டத்தரணிகளுக்கு அவர் இக்கோரிக்கையை முன்வைத்திருந்ததாக, சட்ட மாஅதிபரின் இணப்பாளர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
—–
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவரது பிரத்தியேக செயலாளர் மற்றும் கொழும்பின் மூன்று துணை ஆயர்களுக்கு கடுமையான எச்சரிக்கைகளை விடுக்கப்பட்டுள்ளது.
ஆணைக்குழு முன் சாட்சியமளிக்கும் சாட்சிகள் அளித்த கருத்துக்களை மறுத்து சர்ச்சைக்குரிய வகையில் ஊடகங்களுக்கு ஊடக வெளியீடுகளை வெளியிட வேண்டாமென, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் இவ்வாறு கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.
இன்று (24) ஆணைக்குழுவில் முன்னிலையில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவரது செயலாளர் மற்றும் மூன்று துணை ஆயர்களுக்கும் நேற்றையதினம் (23) ஆணைக்குழுவினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
ஆணைக்குழுவை குறைத்து மதிப்பிடும் வகையில் ஊடகங்களுக்கு அண்மையில் வெளியிட்ட அறிக்கைகள் தொடர்பில் அவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கட்டளையிடும் தளபதியாகவும், பாதுகாப்பு அமைச்சிற்கு பொறுப்பானவராகவும், சட்ட ஒழுங்கிற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையிலும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் முன்னெடுக்கப்பட்ட சமயத்தில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் திறனற்றதாக காணப்பட்டதாக, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெனாண்டோ, குறித்த ஆணைக்குழுவில், கடந்த வாரம் வழங்கிய வாக்குமூலம், முற்றிலும் பொய்யானது என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிரத்தியேக செயலாளர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (20) அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.
அதே போன்று, குறித்த ஆணைக்குழுவில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெனாண்டோ கடந்த வியாழக்கிழமை (17) வழங்கிய வாக்குமூலத்தை மறுக்கும் வகையில் கொழும்பின் மூன்று துணை ஆயர்களும் இணைந்து ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தனர்,
—–
பிரபல பாதாளக்குழு உறுப்பினரான ‘ரத்மலானே ரொஹா’ என அழைக்கப்படும் தேவமுணி ஹெரல் ரோஹண டி சில்வா, பொலிஸாருடன் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.
நேற்றிரவு (23) நீர்கொழும்பு, கொச்சிக்கடை பிரதேசத்திலிருந்து இந்தியாவிற்கு ட்ரோலர் படகில் தப்பிச்செல்ல முயன்ற நிலையில், அவரை கைது செய்ய மேற்கொண்ட முயற்சியின்போது, அவர் பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார். இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து மேற்கொண்ட சோதனையில் சந்தேகநபரிடமிருந்து ரி -56 ரக துப்பாக்கியொன்று, கைத்துப்பாக்கியொன்று, 3 இலட்சம் இந்திய ரூபா பணம் என்பன மீட்கப்பட்டுள்ளன.
குறித்த சந்தேகநபர் போதைப்பொருள் விற்பனை, கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என, பொலிஸார் தெரிவித்தனர்.