நடிகை தீபிகா படுகோனின் மேலாளர் கரிஷ்மா பிரகாஷை விசாரித்திருக்கும் போதை மருந்துத் தடுப்புப் பிரிவு போலீஸார் நடிகை தீபிகா படுகோனுக்கும் சம்மன் அனுப்பியுள்ளனர்.
மேலும், நடிகைகள் சாரா அலி கான், ஷ்ரத்தா கபூர், ரகுல் ப்ரீத் சிங் ஆகியோருக்கும் அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். ஃபேஷன் டிசைனர் சிமோன் கம்பட்டாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவர் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தியுள்ளார். தீபிகா வெள்ளிக்கிழமை அன்றும், மற்ற நடிகைகள் வியாழக்கிழமை அன்றும் விசாரிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தில் போதை மருந்து சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வரும் போதை மருந்து தடுப்புப் பிரிவு போலீஸார், ஏற்கெனவே தீபிகா படுகோனின் மேலாளர் கரிஷ்மா பிரகாஷுக்கு சம்மன் அனுப்பியிருந்தனர். புதன்கிழமை அன்று அவர் விசாரணைக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் வரவில்லை.
போதை மருந்து தொடர்பாக நடந்த வாட்ஸ் அப் உரையாடல் ஒன்று சமீபத்தில் வெளியானது. இதில் கரிஷ்மா மற்றும் தீபிகாவின் பெயர்கள் சம்பந்தப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
ஏற்கெனவே சுஷாந்தின் காதலி ரியா, ரியாவின் சகோதரர் ஷௌவிக், சுஷாந்தின் மேலாளர் சாமுயல் மிரண்டா, தனிப்பட்ட உதவியாளர் திபேஷ் சாவந்த் உள்ளிட்ட 16 பேரை போதை மருந்து தடுப்புப் பிரிவு போலீஸார் இந்த வழக்கில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
நடிகர் சைஃப் அலி கான், அம்ரிதா சிங் தம்பதியின் மகள் சாரா அலி கான். ஷ்ரத்தா கபூர், மூத்த பாலிவுட் நடிகர் ஷக்தி கபூரின் மகள். பிரபல பாட்மிண்டன் வீரர் பிரகாஷ் படுகோனின் மகள் தீபிகா படுகோன். இவர் நடிகர் ரன்வீர் சிங்கைத் திருமணம் செய்துள்ளார்
சில ஊடகங்களில் வெளியானதுபோல நடிகை தியா மிர்ஸாவுக்கு எந்த சம்மனும் அனுப்பப்படவில்லை என அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். சுஷாந்தின் திறன் மேலாளர் ஜெயா சாஹாவிடம் தொடர்ந்து மூன்றாவது நாளாக விசாரணை நடந்துள்ளது. இது தவிர ‘உட்தா பஞ்சாப்’, ‘கஜினி’ உள்ளிட்ட திரைப்படங்களின் தயாரிப்பாளர் மது மண்டேனா வெர்மாவிடம் போதை மருந்து தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.